மருதமலை முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி
- கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது
- திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வடவள்ளி,
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த வாரம் புதன்கிழமை காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
நேற்று கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில் சுப்பிரமணிய சுவாமி சூரபத்மனை வதம் செய்தார். சூரசம்ஹார நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி காலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
காலை 9.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யான நிகழ்ச்சி நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.
வள்ளி பச்சை பட்டு உடுத்தியும், தெய்வானை ரோஜா நிற பட்டு உடுத்தியும் சுப்பிரமணிய சுவாமி சந்தன நிற பட்டு உடுத்தி கல்யாண மண்டபத்தில் பொன்னூஞ்சலில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
தொடர்ந்து அனைவரும் நலமாக 16 செல்வங்களும் பெற்று வாழ வேண்டி உரல் இடித்து தேவார பொற்சுண்ணம் பாடல்களை ஓதுவார்கள் பாடி மஞ்சள் இடித்தனர். திருக்கல்யாணத்தில் பங்கேற்றவர்கள் ரூ.57 ஆயிரத்து 910 மொய் எழுதினர்.
அதை தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி பல்லக்கில் திருவீதி உலா வந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கந்த சஷ்டி விழாவிற்கு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் விரதத்தை முடித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகளை கட்டளைதாரர்கள், கோவில் துணை ஆணையர் ஹார்சினி ஆகியோர் செய்திருந்தனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.