உள்ளூர் செய்திகள்

காங்கயத்தில் எரிவாயு தகன மேடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசிய காட்சி. 

ரூ.3½ கோடியில் நவீன எரிவாயு தகன மேடை - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அர்ப்பணித்து வைத்தார்

Published On 2023-04-17 11:12 GMT   |   Update On 2023-04-17 11:12 GMT
  • பொது அமைப்புகள் ஆங்காங்கே எரிவாயு தகன மேடையை மேம்படுத்தி தருவது தொடர்ந்து வருகிறது.
  • தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளது.

காங்கயம் :

திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகரம் சென்னிமலை சாலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் எரிவாயு தகன மேடை செயல்பட்டு வந்தது. தற்போது இந்த இடத்தில் காங்கயம் ரோட்டரி ஆத்மா அறக்கட்டளையின் சார்பில் ரூ.3½ கோடியில் இந்த நவீன எரிவாயு தகன மேடை புதிதாகக்கட்டப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த எரிவாயு தகன மேடையை அர்ப்பணித்து வைத்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் இளங்குமரன் அலுவலகத்தை பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி. தியான மண்டபத்தை அர்ப்பணித்து வைத்தார். கலெக்டர் எஸ்.வினீத் ஆம்புலன்ஸ் சேவையை அர்ப்பணித்து வைத்தார். திருப்பூர் மாவட்ட ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் அலுவலர் குடியிருப்பை பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- காங்கயம் நகராட்சி பகுதியில் காங்கயம் ரோட்டரி ஆத்மா அறக்கட்டளையின் சார்பில் ரூ.3½ கோடியில் இந்த நவீன எரிவாயு தகனமேடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இதுபோன்ற பொது அமைப்புகள் நமது மாவட்டத்தில் ஆங்காங்கே எரிவாயு தகன மேடையை மேம்படுத்தி தருவது, கூடுதலாக பள்ளி கட்டிடங்கள் அமைப்பது என எண்ணற்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.

இதுபோல் தொடர்ந்து பொதமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பணிகளை செய்து அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். முதல்-அமைச்சர் பொறுப்பேற்கும் போது அன்றைக்கு கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது. அமைச்சர்கள்,எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் உடனே அந்தந்த மாவட்டத்திற்குச் சென்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள். தடுப்பு நடவடிக்கை தீவிர படுத்தியதன் விளைவாக தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளது.

காங்கயம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தியதற்கும், முதல்-அமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைய உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் காங்கயம் சட்டமன்ற தொகுதியை தேர்ந்தெடுத்தற்கும் முதல்-அமைச்சருக்கு எனது சார்பாகவும் காங்கயம் சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவரும்,தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன், காங்கயம் நகராட்சி தலைவர் ந.சூரியபிரகாஷ், ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ், ஆத்மா அறக்கட்டளையின் தலைவர் ஜி.பழனிசாமி, துணைத்தலைவர் எம்.மோகன்ராஜ், செயலாளர் எஸ்.துரைமுருகன் என்ற ஸ்ரீதர், பொருளாளர் எம்.எஸ்.மனோகரன், திருப்பூர் மாவட்ட குத்து சண்டை வீரர்கள் சங்க செயலாளர் அப்பு சிவசுப்பிரமணியம், திருப்பூர் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காங்கயம் ராமசாமி, நன்கொடையாளர் லோகநாதன் உள்பட ரோட்டரி ஆத்மா அறக்கட்டளையின் அறங்காவலர்கள், ரோட்டரி காங்கயம் டவுன் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News