அனுமதியின்றி வைத்த விளம்பர பலகைகளை அகற்றாவிட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை - மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
- பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகள் மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று அமைக்க வேண்டும்.
- சட்டவிதிகளின்படி சமர்ப்பிக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆணையாளரால் உரிமம் வழங்கப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் சட்டவிதிகளின்படி 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகளின் சட்டத்தின்படி விளம்பர பலகைள், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகள் மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று அமைக்க வேண்டும். சட்டவிதிகளின்படி சமர்ப்பிக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆணையாளரால் உரிமம் வழங்கப்படும். இதுநாள் வரையிலும் அனுமதி பெறாமல் விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகள் வைத்துள்ளோர் 3 நாட்களுக்குள் உரிய பாதுகாப்புடன் தாங்களாகவே விளம்பர பதாகைகள், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகளை அகற்றிக்கொள்ள வேண்டும். தவறினால் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் 1998 பிரிவு 117-ன்படி மாநகராட்சி மூலம் அகற்றப்படுவதுடன் உரிய செலவுத்தொகை உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். மேலும் சட்டப்பிரிவு 117-யு-பிரிவின்படி குற்ற வழக்கு தொடரப்பட்டு 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.