திருப்பூர் மாவட்டத்தில் திறந்தவெளி கிணறு, குளங்களில் விழுந்து 3 ஆண்டுகளில் 336 பேர் பலி
- மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடரின் போது, பேரிடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது
- 1,292 பிராணிகளை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில், திறந்தவெளி கிணற்றில் விழுந்து கடந்த மூன்றாண்டில் மட்டும் 336 பேர் இறந்துள்ளனர்.மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடரின் போது மக்களை பாதுகாக்கவும், முன்னெச்சரிக்கை நடவடி க்கை மேற்கொள்ளவும், பேரிடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் நேரடி கண்காணிப்பில், அந்தந்த மாவட்டங்களில், பேரிடர் சார்ந்து மக்கள் எதிர்கொ ள்ளும் முக்கியமான பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கிராம,நகர்ப்புறங்களில் உள்ள குளம், குட்டைகளில் குளிக்க, மீன்பிடிக்க செல்லும் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பலர் நீரில் சிக்கி பலியாகின்றனர்.நெடுஞ்சாலை ஓரங்களில் திறந்து நிலையிலும், வேலி அமைக்கப்படாத கிணற்றிலும் தவறி விழுந்து பலரும் உயிரிழக்கின்றனர்.
உயரும் பலி எண்ணிக்கை : கடந்த 2020ல் 104 பேர், திறந்தவெளி கிணறு, குளங்களில் விழுந்து இறந்துள்ளனர். 2021ல் 109 பேர்; 2022ல் 123 பேர் என மூன்றாண்டில் மட்டும் 336 பேர் பலியாகியுள்ளனர்.மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்க ளுக்கு கடந்த 2020ல் குளம் மற்றும் கிணற்றில் தவறி விழுந்தவர்களை மீட்க கேட்டு 687 அழைப்புகள் வந்துள்ளன. 2021ல் இது 1,308,2022ல் இது 2032 அழைப்புகளாக அதிகரித்துள்ளது.இதில் 80 சதவீதம் அழைப்புகள் திறந்தவெளி கிணற்றில் விழுந்தவர்களை மீட்பது தொடர்பாக தான்.மனிதர்கள் மட்டுமின்றி பூனை, நாய், மான் உள்ளிட்ட பிராணிகளும் அவ்வபோது திறந்தவெளி கிணற்றில் விழுகின்றன.கடந்த 2020ல் 356, 2021ல், 846, கடந்த 2022ல், 1,292 பிராணிகளை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர்.