திருப்பூர் மாநகரில் ரூ.36¼ கோடியில் 4 உயர்மட்ட பாலங்கள் - மேயர் தினேஷ்குமார் ஆய்வு
- மாநகருக்குள் ஆறு, ஓடைகளின் மேல் உயர்மட்ட பாலம் அமைத்தால் கனரக வாகனங்கள் சிரமம் இல்லாமல் சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- உயர்மட்ட பாலங்கள் அமைக்கும்போது முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். மாநகருக்குள் நொய்யல் ஆறு, ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடைகளின் மேல் உயர்மட்ட பாலம் அமைத்தால் கனரக வாகனங்கள் சிரமம் இல்லாமல் சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் திட்டமிட்டு உயர்மட்ட பாலங்கள் தேவைப்படும் இடங்களை ஆய்வு செய்தனர். அதன்படி திருப்பூர் ஈஸ்வரன் கோவில் செல்லும் நொய்யல் ஆற்றின் மேல் உயர்மட்ட பாலம், ஜம்மனை ஓடை மேல் தந்தை பெரியார் நகரில் உயர்மட்ட பாலம், சங்கிலிப்பள்ளம் ஓடை மேல் செல்லாண்டியம்மன் துறை அருகே சொர்ணபுரி லே-அவுட்டில் உயர்மட்ட பாலம் மற்றும் நடராஜா தியேட்டர் முன்புறம் பாலம் விரிவாக்கம் ஆகிய பணிகள் என மொத்தம் ரூ.36 கோடியே 36 லட்சத்தில் மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
உயர்மட்ட பாலங்கள் அமைக்கும்போது கனரக வாகனங்கள் எளிதில் சென்று வரவும், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயர்மட்ட பாலங்களுக்கான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.