சேவூரில் பாதுகாப்பின்றி கிடக்கும் 15-ம் நூற்றாண்டு சதிக்கல்.
- முதல் நிலையாக போர்க்களக் காட்சி அமைந்துள்ளது.
- வீரன் வலது கையில் வாளும் இடதுகையில் கேடயமும் வைத்துள்ளான்.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேவூரில் புளியம்பட்டி சாலையோரம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அப்போது பெய்த மழை காரணமாக மண்ணில் புதைந்திருந்த நடுகல்லின் ஒரு பகுதி வெளியே தெரிய ஆரம்பித்தது. இது பற்றி தகவல் அறிந்து வந்த தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முடியரசு இந்த நடுகல்லைச்சுத்தம் செய்து ஆய்வு செய்தார்.
இந்த நடுகல் குறித்து முடியரசு கூறியதாவது:-
இது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால வகையான அடுக்கு நிலை நடுகல் மற்றும் சதிக்கல் ஆகும். முதல் நிலையாக போர்க்களக் காட்சி அமைந்துள்ளது. வீரன் வலது கையில் வாளும் இடதுகையில் கேடயமும் வைத்துள்ளான். வீரன் எதிர்கொள்ளும் மற்றொரு வீரனை அடையாளம் காண முடியாத அளவுக்கு சிற்பம் சிதைவுபட்டுள்ளது. யாரை எதிர்கொள்கிறான் என்பது இதனால் தெரியவில்லை.
இப்போரில் அவன் இறந்துவிட்டதால் அவனது இரு மனைவியரும் சிதையில் விழுந்து உயிர் துறந்துள்ளனர். அடுத்த நிலை தேவ கன்னியர் இருவர் வலது இடது புறங்களில் சூழ இறந்துபட்ட வீரனையும் அவனது இரு மனைவியரையும் வானுலகம் அழைத்துச் செல்லுதல் ஆகும். தேவ கன்னியரின் கரத்தில் சாமரம் வீசுவது போல் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவது நிலையில் வீரனும் இரு மனைவியரும் சிவலோகப் பதவி அடைகின்றனர். நந்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இறுதி நிலையாக வீரன் சிவலிங்கத்திற்கு மாலை அணிவித்து சிவபதம் சேர்தல் ஆகும். இவ்வீரன் இப்பகுதியைச் சேர்ந்த சிற்றரசனாகவோ அல்லது தளபதியாகவோ இருந்திருக்க வேண்டும். வீரன் மற்றும் அவனது மனைவியரின் ஆடை அணிகலன்களை கொண்டு நோக்கும் போது இது புலப்படுகிறது. இக்கல் 6 அடி உயரமும் 4 அடி அகலமும் 5 இஞ்ச் கனமுள்ள பலகைக்கல் ஆகும். இவ்வாறு தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முடியரசு தெரிவித்திருந்தார். இது அடுக்கு நிலை நடுகல் மற்றும் சதிக்கல் என உறுதிப்படுத்தினார்.
இக்கல்லை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் நிலவருவாய் ஆய்வாளர் அன்றைய தினமே பாதுகாப்பாக சேவூர் கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் வளாகத்தில் வைத்தார். மேலும் அன்றைய அகழ்வாய்ப்பக அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் உத்தரவு தந்தவுடன் அகழ்வாய்ப்பகத்திற்கு எடுத்து செல்லப்படும் என்று அகழ்வாய்ப்பக அதிகாரி தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது வரை இந்த சதிக்கலை எடுத்து செல்லவில்லை.