திருப்பூர் பல்லடம் சாலையில் தடுப்பு சுவரில் சரக்கு வேன் மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி
- மேம்பாலத்தில் இருந்து வந்த கார் சரக்கு வேன் பின்புறம் மோதி நின்றது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன், காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
திருப்பூர் :
திருப்பூர் பல்லடம் சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இன்று பகல் 12 மணியளவில் வாகனங்கள் இடைவிடாமல் இயங்கி கொண்டிருந்தன. இந்தநிலையில் திருப்பூரில் உள்ள டையிங் நிறுவனத்தை சேர்ந்த சரக்கு வேன் ஒன்று பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருப்பூர் பழைய பஸ் நிலையம் பல்லடம் சாலை தபால் நிலையம் அருகே வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அவர் மீது மோதாமல் இருக்க சரக்கு வேன் டிரைவர் வேனை ஓரமாக திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் ேமாதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உயிர் தப்பினர். டிரைவர் சுதாரித்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனிடையே விபத்து நிகழ்ந்த போது மேம்பாலத்தில் இருந்து வந்த கார் சரக்கு வேன் பின்புறம் மோதி நின்றது. காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தில் கார் மற்றும் வேனின் முன்பகுதி லேசான சேதமடைந்தது. இந்த விபத்து காரணமாக திருப்பூர் பல்லடம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கார், பஸ்கள் என ஏராளமான வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. இதனால் அவசர வேலையாக சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன், காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்தை சீர் செய்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.
திருப்பூர் பல்லடம் சாலையில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். மேலும் வாகனங்கள் மேம்பாலத்தில் இருந்து கீழ் இறங்கும் போது பழைய பஸ் நிலைய பகுதியில் இருந்து வாகனங்களும், மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்களும் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. மேலும் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றாமல் செல்வதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. விபத்துகள் நிகழாமல் தடுக்க அங்குள்ள தனியார் ஓட்டல் அருகே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அதேப்போல் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.