பயன்பாடின்றி கிடக்கும் காரணம்பேட்டை பஸ் நிலையம், காய்கறி-ஜவுளி சந்தையாக மாற்ற கோரிக்கை
- பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது.
- பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையானது கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. காரணம்பேட்டை பகுதியில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன இதனால் காரணம்பேட்டை நால் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்டு. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அப்போது இருந்த தமிழக அரசு புதிதாக பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த 2014 -15ம் ஆண்டில், ரூபாய் 1.78 கோடி செலவில், புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு முதல்வர் ஜெயலலிதா வீடியோ காணொளி காட்சி மூலம் 16.6.2015ல் திறந்து வைத்தார்.
இதையடுத்துஅந்த வளாகத்தில் இரண்டு சக்கர வாகனநிறுத்தம், வணிக வளாகம்,சுகாதார வளாகம் ஆகியவை சுமார் ரூ.1 கோடியில் கட்டப்பட்டது ஆனால் இந்த புதிய பஸ் நிலையம் இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை .காரணம்பேட்டை நால்ரோட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருப்பதாலும், ஊருக்கு ஒதுக்குப்புற பகுதியில் இருப்பதாலும் இந்த பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்தவில்லை, போக்குவரத்து துறையினர் அரசு பஸ்கள் உள்ளே சென்று வர, உத்தரவிட்டும்,பயணிகள் யாரும் இல்லாததால் அரசு பஸ்கள் தொடரந்து அங்கு செல்வதில்லை தனியார் பஸ்கள் கோவையில் ஓய்வு எடுத்துவிட்டு புறப்பட்ட அரைமணிநேரத்தில் காரணம்பேட்டை வந்துவிடுவதால் அவர்களும் இந்த பஸ் நிலையதித்திற்குள் செல்லாமல் காரணம்பேட்டை நால்ரோட்டில் பயணிகளை இறக்கிவிட்டு சென்றுவிடுகின்றனர்.
இதனால் இந்த பஸ் நிலையம் கடந்த 8 ஆண்டுகளாக காட்சிப்பொருளாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து கடந்த 2020ல் கோடாங்கிபாளையம் ஊராட்சிமன்றத்தின் முயற்சியால், இந்த பஸ் நிலையம் காய்கறி சந்தையாக்கப்பட்டது. பஸ் நிலையம் காய்கறி சந்தை அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டதும், ஏராளமான விவசாயிகள்,வந்து காய்கறி கடைகள் அமைத்தனர்*.தனால் கோடங்கிபாளையம், இச்சிபட்டி, பருவாய்,கரடிவாவி,சுக்கம்பாளையம், செம்மிபாளையம், காடாம்பாடி,காங்கேயம்பாளையம் மற்றும் சூலூர் விமானப்படைதள குடியிருப்பு பகுதி உள்ளடக்கிய சுமார் 25 ஆயிரம் மக்கள் காய்கறிகள் வாங்கி பயன் அடைந்தனர்.
எனவே காரணம் பேட்டையில் பயன்படாமல் உள்ள பஸ் நிலையத்தை, விவசாயிகள், பொதுமக்கள், பயன்பெறும் வகையில் காய்கறி சந்தையாக மாற்ற வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து காரணம்பேட்டையைச் சேர்ந்த பழனிசாமி என்ற விவசாயி கூறியதாவது:- காரணம் பேட்டை பஸ்நிலையம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால், பொதுமக்கள் செல்வதற்கு தயங்குகின்றனர்.மேலும் பஸ் நிலையம் திறக்கப்பட்ட புதிதில் டவுன் பஸ்கள் மட்டுமே வந்து சென்றன. வெளியூர் பஸ்கள் காரணம் பேட்டையில் உள்ள நால்ரோடு பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றனர். இதனாலும் பஸ் நிலையம் பயன்படாமல் போனது. இதன் பிறகு சிங்காநல்லூர் பஸ் நிலையம் துவக்கப்பட்டதால், மதுரை, திருச்சி, உள்ளிட்ட பஸ்கள் சிங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டன. வெளியூரிலிருந்து வந்து ஓய்வெடுத்த பின் மதுரை திருச்சிக்கு புறப்படும் பஸ்கள், சிங்காநல்லூரில் இருந்து புறப்பட்ட அரைமணி நேரத்தில் காரணம்பேட்டைக்கு பஸ் வந்துவிடுகிறது. இதனால், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் ஓய்வெடுக்கவோ, டீ சாப்பிடவோ, விரும்புவதில்லை மேலும் தற்பொழுது வாகனப் போக்குவரத்து அதிகரித்ததால், போக்குவரத்து நெரிசலால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய வேண்டிய நிலை ஓட்டுனர்களுக்கு உள்ளது. இதனாலும் காரணம்பேட்டை பஸ் நிலையத்திற்குள் பஸ் வருவதில்லை, இந்த நிலையில் கடந்த "கொரோனா" காலத்தில், பஸ் நிலையத்தை காய்கறி சந்தையாக மாற்றினார்கள். இதனால் அருகே உள்ள கிராமங்களிலிருந்து காய்கறிகள், பழங்களைக் கொண்டுவந்து விவசாயிகள் விற்பனை செய்தனர். சுற்றுப்புறத்தை சேர்ந்த, கோடங்கிபாளையம், கரடிவாவி, பருவாய், இச்சிப்பட்டி, செம்மிபாளையம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் காய்கறிகளை வாங்கி பயனடைந்தனர். விவசாயிகளுக்கும் போக்குவரத்து அலைச்சல் இன்றி விளை பொருட்களை விற்பனை செய்ய வழி கிடைத்ததால், மகிழ்ச்சி அடைந்தனர். பொதுமக்களுக்கும் புத்தம் புதிய காய்கறிகள் விலை மலிவாக கிடைத்ததால் அவர்களும் பயன் அடைந்தனர்.
எனவே பயன்பாடு இல்லாமல் இருக்கும் காரணம்பேட்டை பஸ் நிலையத்தை, விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காய்கறி சந்தை ஆக மாற்ற வேண்டும். மேலும் இதே பஸ்நிலையத்தில் கால்நடை சந்தையும் செயல்பட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காரணம்பேட்டை பஸ் நிலையத்தை விசைத்தறி ஜவுளி சந்தையாக மாற்ற வேண்டுமென விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், திருப்பூர்,கோவை மாவட்டங்களில் சுமார் 2லட்சம் விசைத்தறிகள்,20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கிவருகின்றன. இந்த நிலையில், பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் ஜவுளி சந்தை அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.ஜவுளி சந்தை அமைப்பதற்கான இடத்தை விசைத்தறியாளர்கள் தங்களது பங்களிப்பு மூலம் வாங்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள தொழில் நிலையில், இடத்தை வாங்குவது விசைத்தறியாளர்களால் முடியாது. இதுதவிர வீட்டு மனை இடங்கள் விலை உயர்ந்துள்ளதால், விசைத்தறியாளர்கள் இடத்தை வாங்குவது சிரமமான காரியம்.
ஜவுளி சந்தை உருவாக்க அரசே இடத்தை வழங்கி உதவ வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கும் காரணம்பேட்டை பஸ் நிலையத்தை, ஜவுளிச்சந்தையாக மாற்ற வேண்டும்.காரணம்பேட்டை வளர்ந்து வரும் பகுதி என்பதால், அங்கு ஜவுளிச்சந்தை அமைந்தால்,விசைத்தறி தொழிலும் வளர்ச்சி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி.பழனிச்சாமி கூறியதாவது:-பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. ஊராட்சி நிர்வாகம் தரப்பில், சுகாதார வளாகம், வாகன நிறுத்துமிடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறை இணைந்து, பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், விரைவில்,பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.