ஆதிதிராவிட மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரி விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்
- நடப்பு கல்வி ஆண்டில் படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களை தேர்வு செய்ய விடுதி மேலாண்மை அமைப்பு என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
- பள்ளி, கல்லூரி விடுதிக்கு அடுத்த மாதம் 5-ந் தேதி வரையில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகளில் நடப்பு கல்வி ஆண்டில் படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களை தேர்வு செய்ய விடுதி மேலாண்மை அமைப்பு என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் இணைய வழியில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் பள்ளி விடுதிக்கு வருகிற 20-ந்தேதி வரையிலும், கல்லூரி விடுதிக்கு வருகிற 18-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரையிலும் https://tnadw.hms.inஎன்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்கள் தேர்வு குழுவினரால் பள்ளி விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு வருகிற 21-ந் தேதி மற்றும் 22-ந் தேதி ஆகிய 2 நாட்களும், கல்லூரி விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி அன்றும் தேர்வு செய்யப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.