முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிெமாழி ஏற்பு
- திருப்பூர் மாநகராட்சி மேயர் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.
- முதியோர்களை குடும்பத்தில் நல்லமுறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன்.
திருப்பூர் :
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15-ந் தேதி முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்புத் தினம் அனைத்து கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் அனுசரிக்கப்பட வேண்டுமெனவும், மேலும் உறுதிமொழியினை அனுசரிக்கவும் ஆணை வெளியிட்டுள்ளது.
அதன்படி திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் இன்று மைய அலுவலக வளாகத்தில்முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். இந்திய குடிமகன்-குடிமகளாகிய நான், முதியோர்களை குடும்பத்தில் நல்லமுறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் , மனோ ரீதியாகவும் உடல்ரீதியாகவும், காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் ,அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன், பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் 2-வது மண்டல தலைவர் கோவிந்தராஜ், துணைஆணையர்கள் பாலசுப்ரமணியன், சுல்தானா, உதவி ஆணையர்(நிருவாகம்) சந்தன நாராயணன், உதவி ஆணையர் (பொ) (கணக்கு) தங்கவேல் ராஜன், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.