பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண் உற்பத்தி குழு கூட்டம்
- பள்ளிகளில் குடிநீர் கட்டமைப்பு கட்டிடங்களை பழுது நீக்கி பராமரிப்பு செய்யவேண்டும்.
- போதை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண் உற்பத்தி குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது இதில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் மோகனா, மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் இதில் விவசாயிகளுக்கான திட்டங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்விக் குழு கூட்டம், 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, ஆணையாளர் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதில், கல்வி வளர்ச்சி, பள்ளி கட்டிட பராமரிப்பு, உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் மங்கையர்க்கரசி கனகராஜ் பேசுகையில். கோடங்கிபாளையம் மற்றும் பருவாய் கிராமங்களில் உள்ள துவக்கப்பள்ளி, அங்கன்வாடி பள்ளிகளில் குடிநீர் கட்டமைப்பு கட்டிடங்களை பழுது நீக்கி பராமரிப்பு செய்யவேண்டும்.மேலும் பள்ளிகளின் அருகாமையில் அரசு தடை செய்துள்ள பாக்கு உள்ளிட்ட போதை சம்பந்தப்பட்ட பொருட்கள் கடைகளில் விற்பனை செய்வதை காவல்துறை மூலம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து பொது நோக்கங்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி பல்லடம் வட்டார பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், அருள்புரம், புளியம்பட்டி ஆகிய சுகாதார நிலையங்களுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், நாய்கள் உள்ளிட்ட தொல்லைகள் ஏற்படுவதால், சுற்றுச்சுவர்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல நோய்கள் பரவுவதை தடுக்க குடிநீரில் குளோரின் மருந்து கலப்பதை உறுதி செய்ய வேண்டும். ஊராட்சிப் பகுதிகளில் குப்பைகள் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில், பல்லடம் துணை தாசில்தார் பானுமதி, மின்வாரிய உதவிப் பொறியாளர் தங்கராஜ், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் பாபு,ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.