பழங்கால கோவில்கள் தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்படும் - இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்
- சில கோவில்கள் போதிய பராமரிப்பின்றி பரிதாப நிலையில் உள்ளன.
- திருப்பணி செய்யாமல் சிதிலமடைந்து வருவது குறித்து பக்தர்கள் வேதனை.
மடத்துக்குளம் :
உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் அமராவதி மற்றும் உப்பாறு படுகையில் பழமை வாய்ந்த கோவில்கள் உள்ளன.இதில் சில கோவில்கள் போதிய பராமரிப்பின்றி பரிதாப நிலையில் உள்ளன.கொழுமம் கரிவரதராஜ பெருமாள் கோவில், கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் உள்ளிட்ட கோவில்களுக்கு நீண்ட காலமாக திருப்பணி செய்யாமல் சிதிலமடைந்து வருவது குறித்து பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில், கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோவிலில், இந்து அறநிலையத்துறை உதவிப்பொறியாளர் அருள், செயல் அலுவலர் சங்கீதா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இது குறித்து இந்து அறநிலையத்துறையினர் கூறியதாவது:- பழங்கால கோவில்களை தொன்மை மாறாமல் புதுப்பிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.தொல்லியல்துறை மற்றும் நிபுணர்களை உள்ளடக்கிய இக்குழுவினர் கோவில்களில் நேரடி ஆய்வு செய்துள்ளனர்.
அவர்கள் வழங்கும் வழிகாட்டுதல் அடிப்படையில், கொழுமம் கரிவரதராஜ பெருமாள் கோவில், கோட்டமங்கலம் வல்லகொண்டம்மன் கோவிலை புதுப்பிக்க அரசு அனுமதி பெறப்பட்டுள்ளது. திருப்பணிக்காக திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி பல கட்டமாக நடந்து வருகிறது.திட்ட மதிப்பீடு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்த பிறகு நன்கொடைதாரர்கள் பங்களிப்புடன் விரைவில் திருப்பணிகள் துவங்கும். கொழுமம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், தற்காலிக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அனைத்து கோவில்களின் அருகிலும் கோவிலுக்குரிய இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.