தேவாலயங்களை புனரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு
- தேவாலய கட்டிடத்தின் வயது 10 முதல் 15 வருடம் வரை இருந்தால் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.
- 20 வருடங்களுக்கு மேல் இருந்தால் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.
திருப்பூர் :
தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதுக்கேற்ப மானியத்தொகை உயர்த்தியும் அரசு உத்தரவிட்டுள்ளது.
தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர்வசதிகள் உருவாக்குதல் ஆகிய பணிகளுக்கு கூடுதலாக பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேவாலய கட்டிடத்தின் வயது 10 முதல் 15 வருடம் வரை இருந்தால் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக மானி–யம் உயர்த்தப்பட்டுள்ளது. 15 முதல் 20 வருடம் வரை இருந்தால் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக மானியம் உயர்த்தப்பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு மேல் இருந்தால் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.
கலெக்டர் தலைமையிலான குழு, பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொண்டு கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணையாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், தகவலுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421 2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்தார்.