உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி. 

தி.மு.க. ஆட்சியில் லஞ்சம்-ஊழல் அதிகரித்து விட்டது - பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேச்சு

Published On 2022-09-16 10:55 GMT   |   Update On 2022-09-16 10:55 GMT
  • தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு பிரயோஜனம் ஆகக் கூடிய ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை.
  • தி.மு.க. ஆட்சியின் மின்வெட்டு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு இதையெல்லாம் மூடி மறைக்க சோதனை நடத்துகிறார்கள்.

திருப்பூர் :

தமிழ்நாடு அரசின் மின்வெட்டு உள்ளிட்ட மக்கள் விரோதப் போக்கினை கண்டித்து, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் குமரன் சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான சி.சிவசாமி, திருப்பூர் ஒன்றிய கழக செயலாளரும், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ.,வுமான கே.என்.விஜயகுமார், திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசும்போது கூறியதாவது :- இந்த ஒன்றரை ஆண்டு தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு பிரயோஜனம் ஆகக் கூடிய ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை. ஆனால்தி.மு.க. ஆட்சியின் மின்வெட்டு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு இதையெல்லாம் மூடி மறைக்க சோதனை நடத்துகிறார்கள். இலங்கை அதிபரான ராஜபட்சே இலங்கையில் இருந்து தப்பிப் பிழைத்தால் போதும் என ஓடினார். அதே நிலைமை தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலினுக்கு ஏற்படும். அ.தி.மு.க. ஆட்சியின் போது குப்பை வரி உயர்த்துவதாக சொன்னதற்கே கருப்பு சட்டை போட்டுக் கொண்டு இரண்டு அட்டைகளை கையில் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்திய ஸ்டாலின் இன்று குப்பைக்கு வரி விதித்து இருக்கிறார். தி.மு.க.வுக்கு திருப்பூருக்கும் எப்போதும் ஒத்து வராது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதெல்லாம் திருப்பூர் நாசமாக போகிறது. 2010 ல் தொழில் எல்லாம் மூடிப்போய் மக்கள் ஊரைக் காலி செய்யும் நிலை ஏற்பட்டது. ரேசன் கார்டை ஒப்படைத்து விட்டு மக்கள் சென்றார்கள். இன்றைக்கு அதே போல ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது. வரி உயர்வு, தொடர் மின்வெட்டு, மின்கட்டண உயர்வால் திருப்பூர் தொழில் நிலை முடக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சாய ஆலை பிரச்சினை ஏற்பட்டு திருப்பூர் தொழில் முடங்கிய போது ஜெயலலிதா வட்டியில்லா கடனாக 213 கோடி ரூபாய் கொடுத்து தொழிலை காப்பாற்றினார்கள். ஆனால் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது.

திருப்பூருக்கு இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது குடிநீர் திட்டங்களை அ.தி.மு.க. அரசு தந்து இருக்கிறது. 1300 கோடி செலவில் நான்காவது குடிநீர் திட்டத்தினை கொண்டு வந்து இருக்கிறோம். ஏற்கனவே நிறைவேறி இருக்க வேண்டிய இந்த திட்டத்தினை மு.க.ஸ்டாலின் நிறுத்தி வைத்து இருக்கிறார். ஒரு நன்மையும் மக்களுக்கு செய்யாத தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். உடனடியாக நான்காவது குடிநீர் திட்டப்பணிகளை முடித்து திருப்பூர் மக்களுக்கு திட்டத்தினை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை என்றால் எடப்பாடியாரின் ஆணையை பெற்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்.

தமிழகத்தில் லஞ்சம் லாவண்யம் அதிகரித்து விட்டது. மின்கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும். காவல்துறை நியாயமாக நடக்க வேண்டும். இவ்வாறு பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.

Tags:    

Similar News