உள்ளூர் செய்திகள்

புதர்மண்டி கிடக்கும் பஸ் நிறுத்தம்.

மயிலாடும்பாறையில் புதர்மண்டி கிடக்கும் பஸ் நிறுத்தம்

Published On 2022-07-26 08:05 GMT   |   Update On 2022-07-26 08:05 GMT
  • பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது .
  • புதர்களை அகற்றி பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை :

உடுமலையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பாண்டியன் கரடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட மழைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாததால் அவதிப்பட்டு வரும் நிலையே உள்ளது. இந்த பகுதிகளுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன.

இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அருகில் உள்ள தேவனூர், புதூர், பொள்ளாச்சி மற்றும் உடுமலை பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் இங்கு உள்ள மயிலாடும்பாறை கருப்பராயன் கோவில் பேருந்து நிறுத்தம் பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடப்பதால் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது .இங்குள்ள பஸ் நிறுத்தத்தை சுற்றிலும் முள் புதர்கள் மற்றும் களைச் செடிகள் அதிக அளவில் முளைத்துள்ளது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தவே மக்கள் தயங்கும் நிலை உள்ளது. அத்துடன் பஸ் நிறுத்தத்தின் ஜன்னல்கள் உள்ளிட்டவை சேதமடைந்து கிடப்பதால் இரவு நேரங்களில் இந்தப் பகுதியில் தெருவிளக்கு வெளிச்சம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே பஸ் நிறுத்தத்தை சீரமைக்கவும் புதர்களை அகற்றி பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News