வறட்சியால் கருகும் தென்னை மரங்கள் - உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
- ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலையில் விலை வீழ்ச்சி, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் பாதித்து வந்தனர்.
- நீர் இன்றி பல ஆயிரக்கணக்கான மரங்கள் காய் பிடிக்காமலும், காய்ந்தும் வருகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலையில் விலை வீழ்ச்சி, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் பாதித்து வந்தனர்.இந்நிலையில் கோடை மழை, தென்மேற்கு பருவ மழை ஏமாற்றியதால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று கிணறு, போர்வெல்களில் நீரின்றியும், புதிதாக போர்வெல்கள் அமைத்தாலும் நீர் இன்றி, நிலைப்பயிரான தென்னையை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
பல கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் காய்ந்து, வெட்டி அகற்றும் அவல நிலை உள்ளது.
இது குறித்து தென்னை விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் மதுசூதனன் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால், நீர் இன்றி பல ஆயிரக்கணக்கான மரங்கள் காய் பிடிக்காமலும், காய்ந்தும் வருகிறது. ஒரு சில மாதங்கள் இதே நிலை நீடித்தால் தென்னை மரங்கள் அடியோடு காய்ந்து கருகும்.
நீண்ட கால பயிரான தென்னையை காக்க தண்ணீர் லாரிகள் வாயிலாக ஒரு லாரி ரூ.4,500 விலை கொடுத்து வாங்கி ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து, மரங்களின் உயிரை காப்பாற்ற விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர். எனவே தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை மரத்திற்கு உரிய இழப்பீடும், மறு நடவிற்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
தென்னை வளர்ச்சி வாரியத்தின் சார்பில் தென்னை காப்புறுதி திட்டத்தில் தென்னை வளர்ச்சி வாரியம் 50 சதவீதம் மற்றும் தலா 25 சதவீதம், மாநில அரசும், விவசாயிகளும் செலுத்தும் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டமும் முறையாக செயல்படுத்தப்படவில்லை.
எனவே பயிர்க்காப்பீட்டு திட்டத்தில், மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் இணையும் வகையில், அரசு துறைகளை ஒருங்கிணைத்து துரித நடவடிக்கை எடுக்கவும், காப்பீட்டுத்தொகையாக ஒரு மரத்திற்கு ரூ.10 ஆயிரம் நிர்ணயிக்கவும் வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.