அவினாசியில் அழகுகலை பயிற்சி நாளை நடக்கிறது
- பயிற்சியில் 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை சேரலாம்.
- 1500 காலி பணி இடங்களுக்கு வேலை வழங்கப்பட உள்ளது.
அவினாசி :
அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை (சனிக்கிழமை)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தையல்,அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகு கலை, ஓட்டுநர், உதவி செவிலியர், நான்கு சக்கர வாகனம் பழுதுநீக்குதல், கணினி, சில்லறை விற்பனை வணிகம், துரித உணவு தயாரித்தல், கைபேசி பழுது நீக்கல் போன்ற இலவச திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தால் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மற்றும் சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். இந்த பயிற்சியில் 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை சேரலாம்.
பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மூலம் 1500 காலி பணி இடங்களுக்கு வேலை வழங்கப்பட உள்ளது. 18 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலரும் திறன் பயிற்சித் திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மட்டும் முகாமிற்கு வரும்பொழுது கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3 ஆகியவை எடுத்து வர வேண்டும். இந்த தகவலை தமிழ் நாடு ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாட்டை பல்வேறு அரசு தொழில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பிரதம மந்திரி கவுசல்விகாஸ் யோஜனா, மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் செய்து வருகிறது.