திருப்பூர் மாநகராட்சியில் 46 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு - அதிகாரிகள் நடவடிக்கை
- வரிகளை செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
- ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலமாகவும் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளை உரிய நேரத்தில் செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. மேலும் வரி செலுத்துமாறு ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலமாகவும் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலும் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்படி 1-வது மண்டலத்தில் 6, 2-வது மண்டலத்தில் 16, 3-வது மண்டலத்தில் 9, 4-வது மண்டலத்தில் 15 என மொத்தம் 46 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் சரியான நேரத்தில் வரிகளை செலுத்தி, குடிநீர் துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.