உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதால் நிலத்தடி நீர்மட்டம் சரியும் அபாயம்

Published On 2023-08-31 09:34 GMT   |   Update On 2023-08-31 09:34 GMT
  • ஜனவரி - பிப்ரவரி மாதங்களை உள்ளடக்கிய குளிர் பருவத்தில் 14 மி.மீ., அளவுக்கு மழை பெய்ய வேண்டும்.
  • பகல் நேரத்தில் அக்னி நட்சத்திர வெயில் போல வெப்ப தாக்கம் அதிகரித்துள்ளது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றிவிட்டதால் நிலத்தடி நீர் மட்டம் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஜனவரி - பிப்ரவரி மாதங்களை உள்ளடக்கிய குளிர் பருவத்தில் 14 மி.மீ., அளவுக்கு மழை பெய்ய வேண்டும். ஜனவரி மாதம் மழை பதிவாகவில்லை. பிப்ரவரி மாதம் மட்டும் 7.75 மி.மீ., அளவுக்கு மட்டும் மழை பதிவாகியுள்ளது.

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களை உள்ளடக்கிய கோடை பருவத்தில் 135.10 மி.மீ., என்ற இயல்பான அளவை காட்டிலும் அதிக மழை பெய்தது. மார்ச் மாதம் 27.34 மி.மீ., - ஏப்ரல் மாதம் 23.53 மி.மீ., - மே மாதம், 105.17 மி.மீ., என 156.04 மி.மீ., அளவுக்கு மழை பதிவானது.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவத்தில் கடந்த 2 மாதங்களில் மழை ஏமாற்றி விட்டது. இம்மாதமும் பருவமழை போக்கு காட்டி க்கொண்டிருக்கிறது. ஜூன் மாதம் 22 மி.மீ., அளவுக்கு பதிவாக வேண்டிய மழை 14.73 மி.மீ., மட்டுமே பதிவாகியுள்ளது.

ஜூலையில் 27.10 மி.மீ., அளவுக்கு இருக்க வேண்டிய மழை 12.76 மி.மீ., மட்டுமே பதிவாகியுள்ளது. இம்மாத (ஆகஸ்டு) மாதத்தின் இயல்பான மழை அளவு 31.70 மி.மீ., ஆனால் நேற்று மாலை வரை 6.24 மி.மீ., அளவுக்கு மட்டும் பதிவாகியுள்ளது.

ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக மழையளவு குறைந்ததால் வறட்சி மெதுவாக தலைகாட்ட துவங்கி விட்டது. கோடை பருவம் விடைபெற்று 3 மாதமாகியும், வெப்பத்தாக்கம் குறையாமல் கொளுத்தி க்கொண்டிருக்கிறது. பகல் நேரத்தில் அக்னி நட்சத்திர வெயில் போல வெப்ப தாக்கம் அதிகரித்துள்ளது.

இருப்பினும் இப்படியே மழை தலைகாட்டாமல் இருந்தால், வறட்சியின் பிடியில் சிக்க வேண்டியிருக்கும். கிராமங்களில் ஆழ்குழாய் கிணறுகள் வறட்சியை நெருங்கிவிட்டன. ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக கடந்த ஆண்டில் 45 மி.மீ., மழை பதிவானது. இந்தாண்டு 30 மி.மீ., மழை குறைந்துபோனது.

ஜூலையில் அதிகபட்ச அளவாக கடந்தாண்டு 68.77 மி.மீ., பதிவாகியிருந்தது. இந்தாண்டு 12.75 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. கடந்த 2014 மற்றும் 2017ம் ஆண்டு மழை அளவு வெகுவாக குறைந்து போயிருந்தது.அடுத்தபடியாக இந்தாண்டு தென்மேற்கு பருவத்தில் மழை அளவு குறைந்து போயுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கோடை மழை வழக்கம் போல் பொய்த்துவிட்டது.தென்மேற்கு பருவமழை இந்தாண்டு ஏமாற்றிவிட்டது. இப்பருவ மழை நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கு மிக முக்கியமானது. தென்மேற்கில் மண்ணில் ஈரத்தன்மை ஏற்பட்ட பின்னரே வடகிழக்கு பருவத்தில் நிலத்தடி நீர் உயரும். இதேநிலை தொடர்ந்தால் நிலத்தடி நீர் மட்டம் சரிவது மட்டுமல்ல, கால்நடைகளுக்கு மேய்ச்சல் இல்லாமல் போகும் ஆபத்தும் இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News