மகளிர் உரிமைத்தொகை பெற தபால் அலுவலகத்தில் கணக்கு தொடங்க வசதி
- பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மாதாந்திர உரிமைத் தொகையை தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
திருப்பூர்:
திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை பெற, தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள தபால் நிலையத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
தபால்காரர், கிராம தபால் ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன், பயோமெட்ரிக் சாதனம் மூலம், பயனாளிகள் தங்கள் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி, விரல் ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க முடியும். இந்த கணக்குக்கு இருப்பு தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமைத் தொகையை அருகில் உள்ள தபால் நிலையங்களில் அல்லது, சிறப்பு சேவை மூலம் தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள், பிரதமரின் உதவித்தொகை பெறுவோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவோர், தொழிலாளர் நல வாரிய உதவித்தொகை பெறுவோர் பயன்படுத்தி வருவோருக்கு பயன்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.