நல்ல விலை கிடைப்பதால் பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் விவசாயிகள்
- பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், தண்ணீர் சுற்றுகள் குறைவு.
- நூற்பாலை நிறுவனங்களின் தேவைக்கும், பருத்தி உற்பத்திக்கும் பெரிய இடைவெளி உள்ளது.
குடிமங்கலம் :
உடுமலை சுற்றுப்பகுதியில் பருத்தி பிரதான சாகுபடியாக இருந்தது. பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், தண்ணீர் சுற்றுகள் குறைவு, தொழிலாளர் பற்றாக்குறை, நோய்த்தாக்குதல், நிலையில்லாத விலை உள்ளிட்ட காரணங்களால் பருத்தி சாகுபடி பரப்பை விவசாயிகள் கைவிட துவங்கினர்.இதனால் பல ஆயிரம் ஏக்கர் சாகுபடி பரப்பு சில ஏக்கராக சரிந்தது.
கடந்த 2008ல் மிக நீண்ட இழை பருத்தி ரகத்துக்கு நல்ல விலை கிடைத்ததால் குடிமங்கலம் வட்டாரத்தில், 100 ஏக்கருக்கும் குறைவாக பருத்தி சாகுபடியானது.இதே போல் 2012-13ம் ஆண்டில் பருவமழை மற்றும் பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தின் போது 200 ஏக்கருக்கும் அதிகமாக பருத்தியை விவசாயிகள் சாகுபடி செய்தனர். அப்போது மத்திய அரசின் சிறப்பு மானியத்திட்டமும் செயல்படுத்தப்பட்டது.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பருத்திக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.
நாமக்கல், கொங்கணாபுரம் உள்ளிட்ட ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் ஏலத்தில், பருத்தி அதிக விலைக்கு விற்பனையானது.குறிப்பாக மிக நீண்ட இழை பருத்தி ரகத்துக்கு, அதிகப்பட்சமாக குவிண்டால் 10,399 ரூபாய், நீண்ட இழை பருத்தி ரகத்துக்கு அதிகப்பட்சமாக குவிண்டால் 12,900 ரூபாய் வரையும் விலை கிடைத்தது.இதனால் நடப்பு சீசனில் பருத்தி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன பகுதிகளில் சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
நூற்பாலை நிறுவனங்களின் தேவைக்கும், பருத்தி உற்பத்திக்கும் பெரிய இடைவெளி உள்ளது. இதனால் இச்சாகுபடி பரப்பை அதிகரிக்க முன்பு மத்திய அரசு சார்பில் மானியத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.அத்தகைய சிறப்புத்திட்டங்களை மீண்டும் செயல்படுத்தி விவசாயிகளுக்கு உதவ வேண்டும். விதை, இடுபொருட்களை மானியத்தில் வழங்குவதுடன், உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வேளாண்துறை வாயிலாக வழங்க வேண்டும்.மேலும் அருகிலுள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் மத்திய பருத்திக்கழகம் வாயிலாக நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும்.
இதனால், நூற்பாலை நிர்வாகத்தினர், விவசாயிகள் என இருதரப்பினரும் பயன்பெறுவார்கள்.விவசாயிகள் கூறுகையில், பருவமழை சீராக பெய்ததால் நடப்பு சீசனில், பருத்தி சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். தொழிலாளர் பற்றாக்குறையே இச்சாகுபடியில் முக்கிய பிரச்னையாக உள்ளது. எனவே தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்ட பணியாளர்களை சாகுபடி பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அரசு உத்தரவிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.