நாட்டு தென்னை ரகங்களை நடுவதில் விவசாயிகள் ஆர்வம்
- தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது
- விவசாயிகள் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.
உடுமலை :
மழை இன்றி வறண்ட வானிலை காணப்படுவதால் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் ஓலைகள் கருகி மரங்கள் ஸ்டார்ச் தயாரிக்க முடியாமல் காய் உற்பத்தி திறன் குறைந்து வருகிறது. அரசு பரிந்துரைக்கும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் வெள்ளை ஈ தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். தென்னை வருமானம் குறைவதால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சிலர் கூறியதாவது :- நாட்டு ரக தென்னையை அவ்வளவாக நோய் பாதிப்பதில்லை. உயர்ரக தென்னையை அதிக அளவில் வெள்ளை ஈ தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு சிலர் உயர் ரக தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு நாட்டு ரகங்களை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அரசு உயர் ரகதென்னையை பயிரிட்டால் அதிக காய் உற்பத்தி கிடைக்கும் என்று பேராசையை தூண்டி விவசாயிகளை படுகுழியில் தள்ளி விட்டது. நோய் பாதித்த பின் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் உள்ளது. நோய் தாக்கிய மரங்களை வெட்டி விட்டு மறு நடவு செய்து வருமானம் பார்க்கும் வரை ஒரு மரத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படும். புதிய ரகங்களை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தும் முன் அரசு பல ஆண்டுகள் சோதனை செய்து வெற்றி அடைந்தால் மட்டுமே பரிந்துரைக்க வேண்டும். விவசாயிகளை பலிகடா ஆக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.