சேவூா் பகுதியில் முறையற்ற மும்முனை மின்சாரம் விநியோகத்தால் விவசாயிகள் அவதி
- 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனா்.
- வாழை, கரும்பு உள்ளிட்ட விளைபொருள்களை அதிக அளவில் பயிரிடுவது வழக்கம்.
அவினாசி :
சேவூா் பகுதியில் இரவு நேரத்தில் முறையற்ற முறையில் மும்முனை மின்சாரம் விநியோகத்தால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சேவூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட தண்டுக்காரம்பாளையம், போத்தம்பாளையம், புலிப்பாா், தாமரைக்குளம், சாலைப்பாளையம், ராமியம்பாளையம், வையாபுரிக்கவுண்டன்புதூா், நட்டுக்கொட்டையான்புதூா் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனா்.
இந்த விவசாயிகள் வாழை, கரும்பு உள்ளிட்ட விளைபொருள்களை அதிக அளவில் பயிரிடுவது வழக்கம். இந்நிலையில், இப்பகுதியில் விவசாயத்துக்கு பயன்படுத்த கூடிய மும்முனை மின்சாரம் இரவு மற்றும் பகல் நேரங்களில் முறையற்று விநியோகிக்கப்படுவதால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே சீரான முறையில் மின்சாரம் விநியோகிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.