பல்லடத்தில் தொடர்ந்து 3- வது முறையாக அதிக ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த 6 லாரிகள் சிறை பிடிப்பு
- 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
- லாரிகளுக்கு ரூ.1,30,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே காளிவேலம்பட்டி, நடுவேவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட்,ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுதடைதலும் ஏற்படுவதாக அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால்,பொதுமக்கள்,மற்றும் விவசாயிகள் நேரிடையாக களத்தில் இறங்கி கடந்த 2 நாட்களாக அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற கேரளா மாநில லாரிகளை சுக்கம்பாளையம் கிராம மக்கள் சிறை பிடித்து,போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்தநிலையில் சுக்கம்பாளையம் பகுதியில் நேற்று மாலை அதிக அளவு கனிமங்களை ஏற்றி வந்த 6 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கனிமங்களை ஏற்றி வந்ததாக அந்த லாரிகளுக்கு ரூ.1,30,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகள் கனிமவளக் கொள்ளையை தடுக்கும் வரை, லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் தொடரும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.