காந்தி பிறந்தநாள் பேச்சுப்போட்டி பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு
- 12-ந் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது.
- முதல் 3 இடங்களைப் பிடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் பரிசுகள் வழங்கப்படும்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டிகள் வருகிற 12-ந்தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது.
இதில் பள்ளி மாணவா்களுக்கு அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசமென்று பெயா் சொல்லுவோம் ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தியடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு முறையே ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் பரிசுகள் வழங்கப்படும். மேலும் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் சிறப்புப் பரிசும் வழங்கப்படவுள்ளது. எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.