ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் சாய ஆலைகளுக்கு பசுமை சான்றிதழ்
- சர்வதேச நாடுகளின் இன்றைய எதிர்பார்ப்பு, பசுமை சார் உற்பத்தி மற்றும் வளம் குன்றா வளர்ச்சி .
- இனி வரும் நாட்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி (சோலார்) மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்
திருப்பூர்:
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தின் முதுகெலும்பாக விளங்கும் சாயத்தொழில் இன்று எதிர்கொள்ள முடியாத சவால்களையும், நெருக்கடி களையும் சந்தித்துள்ளது. நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் திருப்பூரில் ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை பின்பற்றி சாயக்கழிவால் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் சுத்திகரிப்பு செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாட்டுக்கே எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர்.
சர்வதேச நாடுகளின் இன்றைய எதிர்பார்ப்பு, பசுமை சார் உற்பத்தி மற்றும் வளம் குன்றா வளர்ச்சி . அவ்வகையில் திருப்பூரில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து செயல்படுத்தி வருகின்றனர்.தற்போது திருப்பூரில் 420 உறுப்பினர்களும், 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களும், 60 தனியார் சுத்திகரிப்பு நிலையமும் உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்படுத்தப்படும் ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்துக்காக மாபெரும் இயக்க செலவை சுமந்து கொண்டிருக்கின்றனர்.
சாய ஆலைகளின் மாதாந்திர மின் கட்டணம் ஒரு லட்சமாக இருந்தது 1.60 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. மின் கட்டணம், கேட்பு கட்டணம், பீக் ஹவர் கட்டணம் என 18 சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மட்டும் மாதம் 30 கோடி ரூபாய் மின் செலவு ஏற்படுகிறது.
பனியன் ஏற்றுமதி ஓராண்டாக குறைந்து போனதால் உற்பத்தியை 40 சதவீதமாக குறைத்துக்கொண்டு செலவை சமாளிக்க முடியாமல் சாய ஆலைகள் தடுமாறி வருகின்றன. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் பசுமை சார் உற்பத்தியை செய்து வரும் சாய ஆலைகளுக்கு பசுமை சான்று வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.மின் கட்டண செலவு மாபெரும் சவாலாக மாறியுள்ளதால் இனி வரும் நாட்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி (சோலார்) மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறியதாவது:-
ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தால் திருப்பூர் பகுதியில் நொய்யல் புத்துயிர் பெற்றுள்ளது. மின்கட்டண செலவு அதிகரித்துள்ளதால் சோலார் மின் உற்பத்திக்கு மாற அரசு உதவ வேண்டும். உற்பத்தி செலவில் 40 சதவீதம் மின் கட்டணத்துக்கே செலவாகிறது.
எளிய முறையில் ஒற்றைச்சாளர முறையில் அனுமதி பெற்று சோலார் கட்டமைப்பை நிறுவ மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி உதவ வேண்டும். சோலார் அனுமதி பெறும் நடைமுறையை எளிதாக்க வேண்டும். ஏற்றுமதி நிறுவனங்கள் சரிவர இயங்காமல் இருப்பதால் சாய ஆலைகளும் ஸ்தம்பித்து போயுள்ளன. சவால்நிறைந்த சாய ஆலைத்தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மின்கட்டண செலவு அதிகரித்துள்ளதால் சோலார் மின் உற்பத்திக்கு மாற அரசு உதவ வேண்டும். உற்பத்தி செலவில் 40 சதவீதம் மின் கட்டணத்துக்கே செலவாகிறது.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் முருகசாமி கூறுகையில், 1,500 கோடி ரூபாய் செலவில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளோம். ஒரு கிலோவுக்கு 15 ரூபாய் வரை செலவு செய்து, சுத்திகரிப்பு செய்து வருகிறோம். வெளிமாவட்டங்களில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கழிவுநீரை காவிரியில் விடுகின்றனர்.
ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை சிரமத்துடன் செயல்படுத்தும் திருப்பூர் சாய ஆலைகளுக்கு பசுமை சான்றிதழ் (கிரீன் டேக்) வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றார்.