திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம் - முககவசம் அணிய அதிகாரிகள் அறிவுறுத்தல்
- மாவட்டத்தில் 18 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
- முககவசம் அணிய வேண்டும் என்று கடந்த 1-ந் தேதி முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் 50 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவர்களில் 38 பேர் குணமடைந்தனர். மீதம் உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று வரை மாவட்டத்தில் 18 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
தொற்று பாதிப்பு மெல்ல அதிகரித்து வருவதால் மாவட்டம் முழுவதும் தடுப்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:- மாவட்டத்தில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. வெள்ளகோவிலில் 82 வயதான முதியவர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இறந்துள்ளார். அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருவதால் பொது இடங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேணடும். வணிக வளாகங்கள், பஸ், ரெயில் நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். தன்சுத்தம் பேணுங்கள் என்றார். திருப்பூர் மாவட்ட மருத்துவப்பணிகள் துணை இயக்குனர் கனகராணி கூறும்போது, அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று கடந்த 1-ந் தேதி முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். நோயாளிகளை பார்க்க வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் முககவசம் வழங்கி வருகிறோம். தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோ னா சிகிச்சைக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், முழு கவச உடைகள் உள்ளிட்டவை தயாராக உள்ளது. கொரோனா சிறப்பு வார்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஜன், வெண்டிலேட்டர் கருவிகள் உள்ளிட்டவை தயார்படுத்தி வைத்துள்ளோம் என்றார்.