உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் - பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுகோள்

Published On 2023-05-31 06:45 GMT   |   Update On 2023-05-31 06:45 GMT
  • ஊட்டச்சத்து குறைபாடுள்ள 43,299 குழந்தைகளுக்கு சிறப்பு டாக்டர்கள் வாயிலாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
  • 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட 93,200 குழந்தைகளுக்கு உடனடியாக உட்கொள்ளும் சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டுள்ளன.

உடுமலை:

தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் வாயிலாக குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குதல், ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் சுகாதார கல்வி ஆகியவை அங்கன்வாடி வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

இதுவரை 37.27 லட்சம் குழந்தைகளின் உயரம் மற்றும் எடை கணக்கிடப்பட்டு அவர்களில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 43,299 குழந்தைகளுக்கு சிறப்பு டாக்டர்கள் வாயிலாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 6 மாதங்களுக்கு உட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 11,917 குழந்தைகள் மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 16,415 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மாவு, பேரிச்சம்பழம், ஆவின் நெய், புரோட்டின் பிஸ்கட் இரும்புச்சத்து திரவம் மற்றும் குடற்பூச்சி நீக்க மாத்திரை அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டுள்ளன. கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட 93,200 குழந்தைகளுக்கு உடனடியாக உட்கொள்ளும் சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு உணவு அரைத்த வேர்க்கடலை, பால் பவுடர் சர்க்கரை, எண்ணெய், வைட்டமின்கள் மற்றும் மினரல் பொருட்களை கொண்டதாகும்.

திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறையினர் கூறுகையில், இத்திட்டத்தின் பயன்களை அருகில் உள்ள அங்கன்வாடி மையங்கள் வாயிலாக பொதுமக்கள் தெரிந்து கொண்டு முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.அங்கன்வாடி ஊழியர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News