பி.ஏ.பி., வாய்க்காலில் செடிகளை அகற்றும் பணி தீவிரம்
- கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
- 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
உடுமலை :
பி.ஏ.பி., 4வது சுற்று பாசன பகுதியில் தண்ணீர் விரைவில் திறக்கப்பட உள்ளதால் கிளை பகிர்மான வாய்க்கால்களில் செடி கொடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை மூலம் பிஏபி. பாசனத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மொத்தம் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
தற்போது மூன்றாவது மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 4 சுற்றுகள் தண்ணீர் விடப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மூன்றாவது சுற்று இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடைய உள்ளது. இதை தொடர்ந்து நான்காவது சுற்றுக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி நான்காவது சுற்று பாசனப்பகுதி உள்ள கிளை வாய்க்கால்கள் பகிர்மான கால்வாய்களில் படர்ந்து கிடக்கும் செடி கொடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. மேலும் வாய்க்கால் ஷட்டர்களில் கிரீஸ் தடவும் பணியும் நடக்கிறது. இதன் மூலம் கடைமடை பகுதி வரை தண்ணீர் விரைவாக சென்றடையும் என அதிகாரிகள்- விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் 41. 76 அடியாக உள்ளது. தற்போது 813 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 119 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.