மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் விளைபொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
- தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் பதிவு செய்து விற்பனை செய்தால் அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
- நாட்டின் எந்த பகுதிகளில் இருந்தும் விளைபொருட்களை விற்பனை மற்றும் கொள்முதல் செய்து கொள்ளலாம்.
திருப்பூர்,செப்.26-
மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் விளைபொருள்களை விற்பனை செய்வதற்கு பொங்கலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து பொங்கலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் அழகிரி சாந்தலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-
விவசாயிகள் தங்களது விளைபொருட்களான மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, சோளம், கொப்பரை உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களையும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் பதிவு செய்து விற்பனை செய்தால் அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.ஏனெனில் இத்திட்டத்தின் மூலம் நாட்டின் எந்த பகுதிகளில் இருந்தும் விளைபொருட்களை விற்பனை மற்றும் கொள்முதல் செய்து கொள்ளலாம்.இதனால் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளது.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 0421-2316076 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.