தியாகி சுந்தராம்பாளின் வரலாற்றை விவரிக்கும் கதாகாலட்சேபம் நிகழ்ச்சி
- புராண இதிகாசங்களை பாடல்களாலும், பேச்சாலும் விளக்குவதே கதாகாலட்சேபம்.
- பழநியில் இருந்து, கிராமிய தெம்மாங்கு கலைக்குழுவினர் திருப்பூரில் கதாகாலட்சேபம் நிகழ்த்தியுள்ளனர்.
திருப்பூர் :
தியாகி சுந்தராம்பாளின் வரலாற்றை விவரிக்க ஏதுவாக திருப்பூர் ஆண்டிபாளையம் மண்டலம் பா.ஜ.க. சார்பில், 'கதாகாலட்சேபம்' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கோவில்களில் திருவிழாக்களில், கற்றுத்தேர்ந்த விற்பன்னர்களை கொண்டு மகாபாரதம், ராமாயணம் போன்ற புராண இதிகாசங்களை பாடல்களாலும், பேச்சாலும் விளக்குவதே கதாகாலட்சேபம். கிராமிய இசைக்கலைக்கு உயிர்கொடுத்து தியாகிகளின் பெருமையை பறைசாற்றும் வகையில் பழநியில் இருந்து, கிராமிய தெம்மாங்கு கலைக்குழுவினர் திருப்பூரில் கதாகாலட்சேபம் நிகழ்த்தியுள்ளனர்.
எழுச்சியூட்டும் சர்வமத பாடல்களுடன் துவங்கிய கதாகாலட்சேபம், தியாகி சுந்தராம்பாளின் வரலாற்றை விளக்கியும், அவரது பாடல்களை பாடியும் காண்போரை கட்டிப்போட்டது.கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றை விளக்கும் பாடல்களும், இடையிடையே, ஆடல்பாடலுடன் நிகழ்ந்தது.சினிமா பாடல்களுடன் கலை நிகழ்ச்சி நடத்தும் நிலையில் இருந்து மாறி, பாரம்பரியமான கதாகாலட்சேபம் என்ற பெயரில், சுதந்திர போராட்ட வரலாறுகளை காட்சிகளாகவும், நரம்புகளை முறுக்கேற்றிய பாடல்களாகவும் விளக்கியது திருப்பூர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.