உள்ளூர் செய்திகள்

பாலாற்றில் ஆக்கிரமிப்பு பகுதியில் அதிகாரிகள் அளவீடு பணி மேற்கொண்ட போது எடுத்த படம்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற பாலாற்றில் நிலம் அளவீடு செய்யும் பணி

Published On 2023-06-25 06:12 GMT   |   Update On 2023-06-25 06:12 GMT
  • மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது
  • உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

உடுமலை : 

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகி ஓடி வருகின்ற நீர்வரத்தை தடுத்து மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது. அணை நிரம்பும் சூழலில் அணையின் மேற்குப் பகுதியில் உள்ள ஷட்டர்கள் வழியாக பாலாற்றில் உபரிநீர் திறந்து விடப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஆற்றில் வெளியேறும் தண்ணீரானது பல்வேறு கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணர்களின் நீர்இருப்பை உயர்த்தியும் வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக அணையின் நீராதாரங்களில் பெரிதளவில் மழை பெய்யவில்லை. அதனால் ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவதற்கான சூழலும் ஏற்படவில்லை. இதை சாதகமாக கொண்டு வலையபாளையம் பகுதி வழியாக செல்கின்ற பாலாற்றில் ஆக்கிரமிப்புகள் உருவானது. இதனால் ஆற்றின் அகலம் படிப்படியாக குறைந்து ஓடை போன்று காட்சி அளித்து வந்தது.

இதையடுத்து பாலாற்றில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதன் பேரில் உடுமலை தாசில்தார் கண்ணாமணி பாலாற்றில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து வட்டத் துணை ஆய்வாளர் சையது அபுதாஹிர் கண்காணிப்பில் பெரியவாளவாடி உள்ள வட்ட வருவாய் ஆய்வாளர் சுதா, வாளவாடி உள்ள வட்ட அளவர் தஸ்லீமாபானு, வலைய பாளையம் கிராம நிர்வாக அதிகாரி ராஜமாணிக்கம் உள்ளிட்ட அதிகாரிகள் பாலாற்றில் கடந்த 2 நாட்களாக அளவீடு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

பணி நிறைவடைந்த பின்பு ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்பட உள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதேபோன்று பாலாற்றை முழுமையாக ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதை அகற்றுவதற்கும் அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News