உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசிய போது எடுத்த படம். அருகில் அமைச்சர் கயல்விழி, மேயர் தினேஷ்குமார், கலெக்டர் வினீத் மற்றும் பலர் உள்ளனர்.

புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பொதுமக்கள் நிதி வழங்க அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வேண்டுகோள்

Published On 2022-10-22 09:45 GMT   |   Update On 2022-10-22 09:45 GMT
  • தமிழகத்தில் மிகவும் அதிநவீன கருவிகளுடன் இந்த புற்றுநோய் மருத்துவமனை அமைய உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
  • புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயறியதல், சிகிச்சைக்கு பயனுள்ளதாக இந்த மருத்துவமனை இருக்கும்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.60 கோடி மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், தன்னார்வலர்கள், தொழில் அமைப்பினருடன் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கலெக்டர் வினீத், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புற்றுநோய் மருத்துவமனையில் பெட் ஸ்கேன் கருவி ரூ.5 கோடி மதிப்பிலும், 38 படுக்கை வசதியுடன் கூடிய இரு அறைகள், 2 அறுவை சிகிச்சை அரங்கம், புற்றுநோயியல் அரங்கம், கேத் ஆய்வகம், ஆய்வக கருவிகள், 9 மினி ஆய்வக அறைகள், 16 மருத்துவ அறைகள், ஒரு லினியர் ஆக்ஸிலரேட்டர் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் மிகவும் அதிநவீன கருவிகளுடன் இந்த புற்றுநோய் மருத்துவமனை அமைய உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயறியதல், சிகிச்சைக்கு பயனுள்ளதாக இந்த மருத்துவமனை இருக்கும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி இணைந்து 67 சதவீத பங்களிப்பு நிதியாகவும், தன்னார்வலர்கள், அமைப்பினர், பொதுமக்கள் பங்களிப்புடன் 33 சதவீதமும் திரட்டி ரூ.60 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

முதல்கட்டமாக மருத்துவ உபகரணங்களை வாங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நமது தொகையை செலுத்தி அரசின் பங்குத்தொகையையும் செலுத்தி, உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை கருவிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் மொத்த தொகையையும் செலுத்தி மருத்துவ உபகரணங்களை வாங்க வேண்டும். பொதுமக்களின் பங்களிப்பாக இதுவரை ரூ.4½ கோடி நிதி வந்துள்ளது. மீதமுள்ள நிதியை திரட்ட அனைத்து தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் தங்களால் முடிந்த அளவு நிதியை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேயர் தினேஷ்குமார் பேசும்போது, புற்றுநோய் மருத்துவமனை கட்டிடம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்க வேண்டும். அவற்றை பெற்று முதல்கட்டமாக கட்டிட பணிகளை தொடங்கி விட்டால் தன்னார்வலர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு தொடர்ந்து நிதி அளிப்பார்கள். அதனால் கட்டிட பணியை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என்றார்.கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் ரூ.10 லட்சம், மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.5 லட்சம் காசோலைகளை வழங்கினார்கள். அனைத்து ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூ.10 கோடி வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாமில் கோரிக்கை மனுக்களை பெற்று அதில் மாற்றுத்திறனாளிளுக்கான அடையாள அட்டைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் இளங்குமரன், திருப்பூர் பிரிண்டிங் அசோசியேசன் தலைவர் ஸ்ரீகாந்த், சைமா சங்க பொதுச்செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் சங்க தலைவர் நாகேஷ், பில்டர்ஸ் அசோசியேசன் தலைவர் ஸ்டாலின் பாரதி, நிட்மா சங்க இணை செயலாளர் ராமகிருஷ்ணன், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், அரிமா சங்கத்தினர், ரோட்டரி சங்கத்தினர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News