மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன அங்காடி - தகுதியானவர்கள் 23-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
- திருப்பூர் மாவட்டத்துக்கு 3 வாகன அங்காடி அமைக்க இலக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பராமரிப்பு செலவை பயனாளியே மேற்கொள்ள வேண்டும்.
திருப்பூர் :
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு ஆண்டு செயல்திட்டத்தின்படி, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் வாகன அங்காடி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு 3 வாகன அங்காடி அமைக்க இலக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அங்காடி அமைக்க விண்ணப்பிக்க, சுயஉதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட, விதவை மகளிர் மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுத்திறனாளிகளாக இருக்க வேண்டும். சுயஉதவிக்குழு, தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையதளத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும். சுயஉதவிக்குழு தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து இருக்க வேண்டும். தொடர்ந்து ஒருவாரத்துக்கு மேல் வாகன அங்காடியை இயக்காவிட்டால் பறிமுதல் செய்யப்படும். பராமரிப்பு செலவை பயனாளியே மேற்கொள்ள வேண்டும்.
விண்ணப்பங்களை திட்ட இயக்குனர், மகளிர் திட்டம், அறை எண்.305, மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வருகிற 23-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.