நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலய திட்டப்பணிகள் தீவிரம்
- தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயம் அமைய உள்ளது.
- வனத்துறை 7.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தாலும், 5 ஆண்டுகளில் பல பிரிவுகளாக செய்ய திட்டமிட்டுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் நஞ்சராயன் குளம் நீராதாரமாக மட்டுமல்ல பறவைகள், பூச்சிகள், பட்டாம்பூச்சிகள் வசிக்கும் பல்லுயிர் சுழற்சி மண்டலமாகவும் மாறியுள்ளது. இக்குளத்தில், தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயம் அமைய உள்ளது. தற்போது சரணாலய பணி வேகமெடுத்துள்ளது. மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்பட்டு வனத்துறை வசம் குளம் முழுமையாக ஒப்படைக்கப்பட உள்ளது.
குளத்தின் மண் கரை 2,797 அடி நீளம் அமைக்கப்பட்டுள்ளது. குளத்தில் அதிகபட்சமாக 39.50 அடி தண்ணீர் தேக்கப்படுகிறது. மொத்தம்2.53 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.தனியார் நிறுவனம் வாயிலாக குளத்தில் அமைய உள்ள கட்டமைப்பு வசதிகள் மற்றும் பறவைகள் சரணாலயம் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி நடந்து வருகிறது. வனத்துறை முழுமையான சர்வே நடத்தி முழு எல்லையை கண்டறிந்துள்ளது. குளத்தின் மொத்த பரப்பு 310 ஏக்கர்.
திருப்பூர் கூலிபாளையம் ரோட்டின்,ரெயில்வே பாலத்துக்கு முன்பாக இடது புறம் செல்லும் மண்பாதையே, பறவைகள் சரணாலயத்தின் பிரதான பாதையாக மாறப்போகிறது. கூலிபாளையம் ரோட்டில், அலங்கார வளைவும், அங்கிருந்து அணுகுசாலையும் அமைக்கப்படுகிறது.
அணுகுசாலை அருகிலேயே பார்க்கிங் வசதியும் அங்கிருந்து சென்றால் ரெயில்வே பாதை நெருங்கும் இடத்தில் கன்சர்வேஷன் சென்டர் அமைக்கப்படுகிறது. குழந்தைகள் விளையாட்டு பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா, ஆக்சிஜன் பூங்கா அமைய உள்ளது.
சிறு கூட்டரங்கு, கருத்தரங்கு வளாகம், வரவேற்பு அறை, டிக்கெட் கவுன்டர், மூங்கில் பூங்கா ஆகியவை அமைகின்றன. அங்கிருந்து நஞ்சராயன் நகரை ஒட்டியபடி குளக்கரையில் சென்றால் நஞ்சராயன் நகர், தென்கோடி எல்லையில் உயரமான வாட்சிங் டவர் அமைக்கப்படுகிறது. ஏறத்தாழ குளத்தின் மையப்பகுதியை நெருங்கி விடுவதால் அங்கிருந்து குளத்தின் முழு பரப்பையும் பார்க்க முடியும்.
வனத்துறை 7.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தாலும், அப்பணிகளை 5 ஆண்டுகளில் பல பிரிவுகளாக செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட உள்ளது.
முதல் ஆண்டில் (2022-23) ரூ.13.25 லட்சம்,2வது ஆண்டில் ரூ. 86.30 லட்சம் ,3வது ஆண்டில் ரூ. 3.60 கோடி,4வது ஆண்டில்ரூ. 1.35 கோடி, 5வது ஆண்டில், 1.54 கோடி என பிரித்து ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் பறவைகள் சரணாலயம் உருவாக 5ஆண்டுகளாகிவிடும்.
இந்நிலையில் திருப்பூர் பசுமை ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், மாநகராட்சியுடன் கரம் கோர்த்து நமக்கு நாமே திட்டத்தில், பணிகளை 3 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, அனைத்து அமைப்பினர், தன்னார்வலர்கள், விவசாயிகள் இணைந்த ஒருங்கிணைந்த தயாரிப்பு குழு கூட்டம் விரைவில் திருப்பூரில் நடைபெற உள்ளது. தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழு இத்திட்ட பணிகளை செம்மையாக செய்திட திட்டமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.