அரசு வேளாண் திட்டங்களை விவசாயிகள் பெற புதிய இணையதளம்
- அரசின் திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
- கிரைன்ஸ் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
திருப்பூர் :
விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை அடுக்குத்திட்டத்தின் கீழ் கிரைன்ஸ் என்ற இணையதளம் அரசின் திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கிரைன்ஸ் என்ற இணையதளம் மூலமாக அரசின் நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் வருவாய்த்துறை, வேளாண்மை- உழவர்நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பேரிடர்மேலாண்மை, கூட்டுறவுத் துறை, பட்டு வளர்ச்சிதுறை, வேளாண் பொறியியல் துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் விற்பனை, கால்நடை பராமரிப்புத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, விதைச் சான்றளிப்பு மற்றும் சர்க்கரைத் துறைகள் இணைக்கப்பட உள்ளது.
விவசாயிகளின் விபரங்களை ஒற்றை சாளர முறையில் பதிவு செய்வதால், வெவ்வேறு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக ஆவணங்களை சமர்ப்பிக்காமல் எளிதில் விவசாயிகள் விண்ணப்பிக்கும் வகையில் கிரைன்ஸ் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் வருமாறு:-ஆதார் அடையாள அட்டை,அலைபேசி எண்,புகைப்படம்,வங்கி கணக்கு விபரம்,நில விபரங்கள்.இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட ஆவணங்களுடன் தங்களது கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்-உதவி வேளாண்மை அலுவலர்-உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகி கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.