உள்ளூர் செய்திகள்
பி.ஏ.பி. வாய்க்கால் . 

பி.ஏ.பி., வாய்க்காலில் உடைத்து வீசப்படும் மதுபாட்டில்கள் - விவசாயிகள், கால்நடைகள் பாதிப்பு

Published On 2023-02-19 06:17 GMT   |   Update On 2023-02-19 06:18 GMT
  • மவுனகுருசாமி:விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மண் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
  • இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.போலி விதைகளைத் தடுக்க வேண்டும்.

உடுமலை:

உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் உடுமலை ஆர்டிஓ அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு உடுமலை ஆர்டிஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கினார்.உடுமலை தாசில்தார் கண்ணாமணி,ஆர்டிஓ. நேர்முக உதவியாளர் ஜலஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:-

மவுனகுருசாமி:விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மண் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது.இதனைத் தடுக்க வேண்டும்.திருமூர்த்தி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தில் கடைக்கோடி கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்கதையாக உள்ளது.இதற்கு பராமரிப்புப்பணி மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் சரியாக பணி செய்யாதது காரணமா என்பது குறித்து ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்.சின்னாருக்கு மேல் வனப்பகுதிக்குள் அரசியல் உள்நோக்கத்தோடு சில வேலைகள் நடைபெறுகிறது.அதனைத் தடுக்க வேண்டும்.

பெரியசாமி:மசக்கவுண்டன் புதூர் அருகில் தென்னை நார் தொழிற்சாலை அமைப்பதற்கான சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.கோர்ட் உத்தரவை மதிக்காமல் மின் வாரியம் மின் இணைப்பு வழங்கியுள்ளது.உடனடியாக மின் துண்டிப்பு செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் மின் கம்பியில் சுருக்கு போட்டு தூங்குவோம்.தரமற்ற மக்காச்சோள விதைகளால் ஏக்கருக்கு 21 மூட்டை மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது.இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.போலி விதைகளைத் தடுக்க வேண்டும்.

ராமசாமி:காட்டுப்பன்றிகள் மற்றும் மயில்களால் பெருமளவு இழப்பு ஏற்படுகிறது.ஆனால் காட்டுப்பன்றியால் ஏற்பட்ட சேதத்துக்கு மட்டுமே வனத்துறை இழப்பீடு வழங்குகிறது.காலம் தவறி ஜனவரி மாதம் பூக்கும் பருவத்தில் பெய்த மழையால் நெல் சாகுபடியில் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

பாலதண்டபாணி:மருள்பட்டி பகுதியில் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர்களால் கட்டப்பட்ட கட்டிடம் ஆக்கிரமிப்பில் உள்ளது.அதனை மீட்டுத்தர வேண்டும்.104 ஏக்கர் பரப்பளவில் உள்ள மருள்பட்டி குளத்திற்கு நீர் வரத்து பெறக்கூடிய நீர்வழித்தடத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும்.கால்நடைகளின் தீவனத் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒரு ஏக்கர் மக்காசோளத்தட்டை ரூ .5 ஆயிரம் முதல் ரூ. 7 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கி வாகனங்களில் கொண்டு வருகின்றனர்.ஆனால் உடுமலையில் கொழுமம் சாலை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில போலீசார் அந்த வாகனங்களை நிறுத்தி ரூ .100 வசூல் செய்கின்றனர்.மேலும் காய்கறிகள் கொண்டு வரும் விவசாயிகளை தடுத்து நிறுத்துகின்றனர்.இதனால் ஏற்படும் காலதாமதத்தால் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.எனவே விவசாய வாகனங்களை தடுத்து நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.அமராவதி சர்க்கரை ஆலையில் அரவைக்காக 2 ஆயிரத்து 650 ஏக்கர் கரும்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் மார்ச் மாதம் சரியான படி அரவை துவங்குமா என்ற சந்தேகம் உள்ளது.அதனை தெளிவுபடுத்த வேண்டும்.

மதுசூதனன்:அரசு மூலம் உற்பத்தி செய்யப்படும் அசோஸ்பைரில்லம்,பாஸ்போ பாக்டீரியா போன்றவை வேளாண்மைத்துறை மூலம் 50 சதவீதம்மானியத்தில் வழங்கப்படுகிறது.அதே நேரத்தில் தனியார் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ள அதே பொருட்கள் தோட்டக்கலைத்துறை மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.மானியம் என்ற பெயரில் வெளிச்சந்தையை விட அதிக விலைக்கு இனக்கவர்ச்சிப்பொறி,கடப்பாரை,மண்வெட்டி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது.பயன்படுத்த முடியாத பொருட்கள் வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்படுகிறது.விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை ஒருங்கிணைத்து விரிவான கூட்டம் நடத்த வேண்டும்.உரக்கடைகளில் யூரியா கேட்டால் நானோ யூரியா வாங்கச் சொல்கிறார்கள்.இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.மக்காச்சோளத்துக்கு செஸ் வரி விதிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மக்காச்சோளத்துக்கு 1 சதவீதம் செஸ் வரி வசூலிக்கப்படுகிறது.மேலும் மக்காச்சோளத்தை தனியார் கோழிப்பண்ணை நிறுவனத்துக்கு ரகசிய விற்பனை செய்வதற்குப் பதில் பொது ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டும்.குமரலிங்கத்தில் கணவர் தேனீ கொட்டி இறந்த நிலையில் இருக்கும் பெண்ணுக்கு விதவை சான்று,முதல் திருமண சான்று வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலரால் கடும் அலைக்கழிப்பு ஏற்பட்டுள்ளது.புரோக்கரைப் பார்த்தால் தான் காரியம் நடக்கும் என்ற நிலை உள்ளது.

சேனாதிபதி:கோவில் நிலங்கள் பல இடங்களில் தனி நபர்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக செல்லப்பம்பாளையம் கரட்டுப்பெருமாள் கோவிலுக்குச்சொந்தமான 25 ஏக்கர் நிலம்தனி நபருக்கு பட்டா செய்யப்பட்டுள்ளது.

கோபால்: கலெக்டர் உத்தரவை மீறி விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு பாண்ட் பேப்பரில் ஒப்பந்தம் கேட்கிறார்கள்.விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதை எளிமைப்படுத்தாமல் அலைக்கழிக்கப்படும் நிலையில் வணிக நோக்கத்துக்காக எடுப்பவர்கள் தங்கு தடையில்லாமல் எளிதாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிங்காரம்: மது அருந்துபவர்கள் பிஏபி. வாய்க்கால்,இட்டேரி போன்ற இடங்களில் உடைத்து வீசுவதால் விவசாயிகளும் கால்நடைகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.எரிசனம்பட்டி மின்வாரிய அலுவலகம் 2 கிமீ தூரம் தள்ளி இடம் மாற்றம் செய்யப்படவுள்ளது.இதனால் விவசாயிகள் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.எனவே பழைய இடத்திலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெகதீஸ்ஜே: ஜே. என். பாளையம் முதல் பாலாறுதுறை வரை உள்ள சாலையில் பல இடங்களில் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமல் உள்ளது.இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது.தேங்காய் உரிக்கும் எந்திரத்துக்கு வேளாண் பொறியியல் துறை மூலம் கூடுதல் மானியம் வழங்க வேண்டும்.

ஸ்ரீதர்:குடிமங்கலம் ஒன்றியத்தில் அரசு சிமெண்டுக்கு பணம் கட்டினால் வருவதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் ஆகிறது.தற்போது பதிவு செய்வதற்கே மறுக்கிறார்கள்.பெதப்பம்பட்டி நால் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

Tags:    

Similar News