பி.ஏ.பி. மூன்றாம் மண்டல பாசனத்திற்காக பல்லடம் விரிவாக்க பகுதி வாய்க்கால்களை தூர்வார வேண்டும் - கிராம நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
- பி.ஏ.பி. மூன்றாம் மண்டல பாசனத்திற்காக பல்லடம் விரிவாக்க பகுதி வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும்.
- சின்னாண்டிபாளையம்- ராஜகணபதி நகர் (மங்கலம்) பகுதி மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்னுச்சாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் இடுவாய் சாலையில் இருந்து பிரியும் கருங்காளியம்மன் கோவில் வழியாக வஞ்சிபாளையம் வரை சாலையை சீரமைக்க வேண்டும். திருப்பூர் வீரபாண்டி மின் டிவிஷனுக்கு உட்பட்ட சின்னைய கவுண்டன்புதூர் -பவர் ஹவுஸ் வளாகத்தில் புதிய உதவி மின் பொறியாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்.
மேலும் மங்கலம் மின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்துடன் அக்ரஹாரப்புத்தூர் உதவி மின்பொறியாளர் அலுவலகத்தை சேர்த்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்னாண்டிபாளையம்- ராஜகணபதி நகர் (மங்கலம்) பகுதி மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும். பல்லடம்-இடுவாய்- சின்னாண்டிபாளையம் வழியாக திருப்பூர் வரும் பி 4 என்ற சி.டி.சி.பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்.திருப்பூர் வட்டத்தில் கால்நடைகளுக்கு வரும் கோமாரி மற்றும் அம்மை நோய் பரவாமல் இருக்க தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஏ.பி. மூன்றாம் மண்டல பாசனத்திற்காக பல்லடம் விரிவாக்க பகுதி வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும். திருப்பூர் வட்டம் சின்னாண்டிபாளையத்தில் இருந்து இடுவாய் நெடுஞ்சாலைத்துறை சாலையில் வாகனங்கள் முறையாக செல்ல சாலையை செப்பனிட வேண்டும். திருப்பூர்-மங்கலம் நெடுஞ்சாலைத்துறை சாலையை செப்பனிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.