வடமாநில தொழிலாளர்கள் வாங்குவதால் சூடுபிடிக்கும் பாக்கெட் மளிகை பொருட்கள் விற்பனை
- வடமாநில தொழிலாளர்கள் 70 சதவீதம் பேர் வாடகை வீடுகளில் தங்கி சமைத்து சாப்பிட்டு வேலைக்கு செல்கின்றனர்.
- விலையை பொறுத்து 250 கிராம் -200 கிராம் பாக்கெட்களாக கட்டி விற்கின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் தொழில் நிமித்தமாக 2லட்சத்திற்கும் அதிகமான வடமாநில இளைஞர்கள் வசிக்கின்றனர். திருப்பூர் மாநகரில் மட்டும் 1.50 லட்சம் பேர் உள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் 70 சதவீதம் பேர் வாடகை வீடுகளில் தங்கி சமைத்து சாப்பிட்டு வேலைக்கு செல்கின்றனர்.
கடந்த 6 மாதங்களாக கொல்லிமலை, எடப்பாடி உள்ளிட்ட சேலம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள், திருப்பூரில் ரோட்டோர மளிகை கடைகளை விரித்து, வடமாநில வாடிக்கையாளருக்கு விற்பனை செய்கின்றனர். அங்குள்ள உற்பத்தியாளரிடம் மொத்தமாக பொருட்களை வாங்கி 250 கிராம் பாக்கெட்களாக தயாரித்து, திருப்பூர், காங்கயம், கொடுவாய் பகுதிகளில் கடை நடத்த துவங்கிவிட்டனர்.
கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சை பயறு உட்பட, அனைத்து வகை மளிகை பொருட்களையும் தலா 20 ரூபாய் பாக்கெட்டுகளாக மாற்றி விற்கின்றனர். விலையை பொறுத்து 250 கிராம் -200 கிராம் பாக்கெட்களாக கட்டி விற்கின்றனர்.
இது குறித்து சாலையோர வியாபாரிகள் கூறுகையில், வட மாநிலத்தினர் பலர், ரேஷன் அரிசியை மக்களிடம் கேட்டு வாங்குகின்றனர். அத்துடன் தலா20 ரூபாய்க்கு விற்கும் மளிகை பொருள் பாக்கெட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமையும், காங்கயத்தில் திங்கட்கிழமையும், கொடுவாயில் செவ்வாய் கிழமையும் கடை நடத்துகிறோம். மற்ற நாட்களில், பொருட்களை வாங்கி வந்து எடைபார்த்து பாக்கெட் தயாரிக்கிறோம் என்றனர்.