உடுமலை அருகே பஸ் கவிழ்ந்து விபத்து - காயமடைந்தவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்
- பள்ளி விட்டு மாணவ- மாணவிகள் ஊருக்கு திரும்பும் நேரம் என்பதால் அதிகளவில் மாணவ-மாணவிகள் பயணம் செய்துள்ளனர்.
- பள்ளி விட்டு மாணவ- மாணவிகள் ஊருக்கு திரும்பும் நேரம் என்பதால் அதிகளவில் மாணவ-மாணவிகள் பயணம் செய்துள்ளனர்.
குடிமங்கலம்:
உடுமலையில் இருந்து தடம் எண் 22 டவுன் பஸ் நேற்று மாலை 4.30 மணிக்கு ஆமந்தகடவு அம்மா பட்டிக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் 25-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை டிரைவர் சதீஷ்குமார் (வயது 45) என்பவர் ஓட்டினார்.
அந்த பஸ் குடிமங்கலம் அருகே சனுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே டிராக்டர் ஒன்று வந்தது. அந்த டிராக்டருக்கு வழி விடுவதற்காக பஸ்வை டிரைவர் திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிர்பாராத விதமாக உப்பாறு ஓடையில் கவிழ்ந்தது. பள்ளி விட்டு மாணவ- மாணவிகள் ஊருக்கு திரும்பும் நேரம் என்பதால் அதிகளவில் மாணவ-மாணவிகள் பயணம் செய்துள்ளனர்.
இந்த விபத்தில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பஸ்சின் ஒரு பக்கம் ஜன்னல் பகுதி தரையில் சிக்கிக்கொண்டது. இதனால் பஸ்சில் சிக்கிய மாணவ-மாணவிகளும், பயணிகளும் அபயக்குரல் எழுப்பினர். உடனே அருகில் உள்ளவர்கள் ஓடி சென்று காயம் அடைந்த தேவிகா (வயது 55), விந்தியா (21), சரஸ்வதி (53), முத்தம்மாள் (65), மகேஸ்வரி (52), வாசுகி (17), அபிநயா (16), சஞ்சய் (16), தனலட்சுமி (42), கலைச்செல்வி (16), பிரியங்கா (16), வசுந்தரா (16), வித்யா விகாசினி (15) உள்பட 41 பயணிகளை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் படுகாயம் அடைந்த வெங்கடாசலம் (வயது45) மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் மட்டும் 25 மாணவ-மாணவிகள் காயம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் காயமடைந்து உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று காலை செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் .அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.