தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் : சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகும் திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் - சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் தீவிரம்
- கடந்த ஆண்டில் இருந்து உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி பனியன் உற்பத்தி நிறுவனங்கள் உட்பட அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது.
- அவசரமான ஆர்டர் இருந்தாலும் கைவசம் உள்ள வடமாநில தொழிலாளர்களை கொண்டு பணிகளை முடிக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.
திருப்பூர்:
ஒரு காலத்தில் திருப்பூர் பனியன் தொழில் நகரத்தில், தீபாவளி என்றாலே 10 நாட்களுக்கு முன்பாகவே, பரபரப்பு தொற்றிக்கொள்ளும். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே போனஸ் வழங்குவார்கள். அதிலிருந்தே, நகரப்பகுதியில் உள்ள கடைகள் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பின் திருப்பூரில் தீபாவளி கொண்டாட்டம் மந்தமாகிவிட்டது. கடந்த ஆண்டில் இருந்து உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி பனியன் உற்பத்தி நிறுவனங்கள் உட்பட அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி போனஸ் வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4-ந்தேதி முதல் போனஸ் பட்டுவாடா தொடங்கி விட்டது. இருப்பினும் பெரும்பாலான பனியன் நிறுவனங்கள் இன்று அல்லது நாளைதான் போனஸ் வழங்க திட்டமிட்டுள்ளன. திருப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் கடைகளுக்கு வந்து செல்வதால் நகரப்பகுதி கலகலப்பாக காணப்படும். தற்போது பனியன் தொழிற்சாலைகளில் பணி குறைவு என்பதால் தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்கள் வரை விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளனர். அவசரமான ஆர்டர் இருந்தாலும் கைவசம் உள்ள வடமாநில தொழிலாளர்களை கொண்டு பணிகளை முடிக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி நாளையுடன் (9-ந்தேதி) உற்பத்தி பணிகளை நிறைவு செய்து விட்டு 10-ந்தேதி முதல் பண்டிகை விடுமுறை அளிக்க திட்டமிட்டுள்ளன. சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்கள் 19-ந்தேதிக்கு முன்னதாக திரும்ப போவதில்லை. இதனால் 20-ந்தேதிக்கு பின்னரே பனியன் தொழிற்சாலைகளின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும். இதுவரை போனஸ் கிடைக்காத தொழிற்சாலைகளில் எப்படியும் இன்று மாலைக்குள் கிடைத்துவிடும். அதற்குள் கொள்முதல் வேலைகளை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்பலாம் எனவும் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர். கடைசி நேர கூட்டத்தில் சிக்காமல் முன்கூட்டியே குடும்பத்தினரை பஸ்சில் அனுப்பி வைக்கவும் தொழிலாளர்கள் தயாராகி விட்டனர்.
சிறப்பு பஸ்கள்
திருப்பூரில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கோவில் வழி ஆகிய 3 பஸ் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் (300-க்கும் மேற்பட்ட) பஸ்கள் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து தான் இயக்கப்பட உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், சிவகங்கை, சிவகாசி, தென்காசி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து தான் சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளதால், அதற்கேற்ப கோவில்வழி பஸ் நிலையத்தை தயார் படுத்தும் பணியில் மாநகராட்சி, போக்குவரத்து கழக அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பஸ் நிலையம் விரிவுப்படுத்தும் கட்டுமான பணி நடந்து வருவதால், கூடுதலான சிறப்பு பஸ்களை பஸ் நிலையத்திற்குள் நிற்க வழியில்லாத நிலைமை உள்ளது. இதனால் பஸ் நிலைய மேற்குபுறத்தில் உள்ள மாநகராட்சி காலியிடத்தை, தூய்மைப்படுத்தி, சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. இந்த இடத்தை ஜே.சி.பி., எந்திரத்தின் உதவியுடன் குப்பை, கழிவுகள் அகற்றப்பட்டு, வழித்தட பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் சேறும், சகதியுமாக உள்ள இடங்களில் மண் கொட்டப்படுகிறது. கூடுதலாக பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டு பின் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பஸ்கள் நிற்பதற்கு பஸ் நிலையத்தில் இடம் போதியதாக உள்ளது. மேலும் அடுத்தடுத்து பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் வரும் போது, நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முன்கூட்டியே காலியிடம் தயார்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்கள் இடையூறு இல்லாமல் சென்று வர தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் மின் விளக்குகளும் பொருத்தப்படும். அத்துடன் அப்பகுதியில் போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என்றனர்.
தற்போது ஸ்மார்ட் சிட்டி பணி தொடங்கியதால், பஸ் நிலையத்தில் இருந்த ரேக், மேற்கூரை முற்றிலும் இடித்து அகற்றப்பட்டு விட்டது. தற்போது மழை பெய்து வரும் நிலையில், வெயிலின் தாக்கமும் அவ்வப்போது அதிகரித்து வருகிறது. குழந்தைகள், குடும்பத்துடன் வரும் பயணிகள் மழை, வெயிலில் படும் சிரமங்களை தவிர்க்க, தற்காலிக நிழற்குடை உள்ளிட்ட ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.