பல்லடத்தில் மழையினால் மின் கம்பங்கள் சரிந்து விழுந்தது
- பல்லடத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்தது
- மாதப்பூர் ஊராட்சி பகுதி களிமண் பூமியாகும். இதனால் மழைக்கு மின் கம்பங்கள் சாய்ந்து விடுகின்றன.
பல்லடம்:
பல்லடத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் பல்லடத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் மழைநீருடன் கழிவு நீரும் கலந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். அண்ணா நகர், மகாலட்சுமிபுரம், பச்சாபாளையம் காலனி, பனப்பாளையம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பச்சாபாளையம், பனப்பாளையம், காலனி பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர். இதற்கிடையே பல்லடம் அருகே உள்ள கள்ளகிணறில் மழையினால் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தது. மின்கம்பங்கள் சாய்ந்ததால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். அங்கு நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக போடப்பட்டிருந்த மண் மழையினால் அரித்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து மாதப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் கூறுகையில், மாதப்பூர் ஊராட்சி பகுதி களிமண் பூமியாகும். இதனால் மழைக்கு மின் கம்பங்கள் சாய்ந்து விடுகின்றன. எனவே மின்கம்பங்கள் அமைக்கும் போது கான்கிரீட் கலவை போட்டு அமைக்க வேண்டும். நேற்று பெய்த மழையினால் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாரும் மின்கம்பம் அருகே இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனவே மின்கம்பங்கள் அமைக்கும் போது பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக உப்பாறு அணையில் 84 மில்லி மீட்டர் மழையும், பல்லடத்தில் 50 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.