பட்டு நூல் விலை சரிவால் பட்டுக்கூடு விலை வீழ்ச்சி
- கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது.
- கடந்த சில மாதங்களாக பட்டுக்கூடு கிலோ 640 ரூபாய் வரை விற்பனையானது.
உடுமலை:
பாலியஸ்டர் பட்டு புடவைகளை பெண்கள் விரும்பி வாங்குவதால் பட்டு புடவை விற்பனை குறைந்துள்ளது என்கின்றனர் பட்டு நூல் உற்பத்தியாளர்கள்.
கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், கோபி மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக பட்டுக்கூடு கிலோ 640 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் சில வாரங்களாக, பட்டுக்கூடு விலை குறைந்துள்ளது.நேற்று முதல் தரமான கூடு ஒரு கிலோ 516 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் கிலோ 390 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனால் பட்டு விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இது குறித்து பட்டு நூல் உற்பத்தியாளர் ஹரி கூறுகையில், தீபாவளி பண்டிகைக்கு முன், பட்டு நூல் விலை அதிகரிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை பட்டு நூல் விலை குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் பட்டு நூல் கிலோ 4500 வரை விற்பனையானது. இப்போது கிலோ 3969 ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கு காரணம் இப்போது ஜவுளி கடைகளில் பாலியஸ்டர் பட்டு புடவைகள், 1000 ரூபாய்க்கு நல்ல கலரில் பளபளப்பாக விற்பனை செய்யப்படுகிறது. அதை பெண்கள் வாங்கி உடுத்த துவங்கி விட்டனர். அதனால் பட்டு சேலை வாங்குபவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பட்டு நூல் விலை வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாகும் என்றார்.