பெருமாநல்லூர் சாலையில் மேம்பாலம் - வாகனங்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
- பாலம் அமைய உள்ள இடம், நிதி ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கப்படும்.
- வடக்கு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
திருப்பூர்:
திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க இணைப்பு சாலைகளில் இருந்து வரும் வாகனங்களால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க பி.என்., ரோட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.முதல்கட்டமாக பி.என்., ரோட்டில் பயணிக்க பல்வேறு ரக வாகனங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
மேட்டுப்பாளையம் புதிய பஸ் நிலையம் பகுதியில் கணக்கெடுப்பு, ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா கூறியதாவது:-
கணக்கெடுப்பு பணி முடிந்து, விரிவான அறிக்கை மற்றும் கருத்துரு தயாரித்து நிதி ஒதுக்கீடு கேட்டு அரசுக்கு விபரங்களை சமர்பிக்கப்படும். அதன்பின், பாலம் அமைய உள்ள இடம், நிதி ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கப்படும்.
பி.என்., ரோடு மேட்டுப்பாளையம் சிக்னலில் இருந்து பாண்டியன் நகர் வரையுள்ள 5 கி.மீ., தூரத்துக்கு உயர்மட்ட பாலம் அமைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. பாலம் அமையும் போது வடக்கு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.