அரசு பஸ்களில் வருவாய் இழப்பை தடுக்க கோட்ட அளவில் குழு அமைப்பு
- வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்டமும், திங்கள், செவ்வாய், புதன் கூட்டம் இல்லாத நிலையிலும் உள்ளது.
- எந்த ஊருக்கு அதிக பயணிகள் பயணிக்கின்றனர் என்பன உட்பட விபரங்களை இக்குழுவினர் சேகரிக்க உள்ளனர்.
திருப்பூர்:
அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் வருவாய் இழப்பு ஏற்படுத்துவதை தடுக்க, கோட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கோட்டத்திற்கும் கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் உட்பட 8 அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இரவு 10:30க்கு பின், அதிகாலை 5:30 மணி வரை இயக்கப்படும் பஸ்கள்,ஒரு வழித்தடத்தில் ஒரு பஸ்சுக்கும் அடுத்த பஸ்சுக்குமான நேர இடைவெளி,பயணிகள்எண்ணிக்கை,எந்த ஊருக்கு அதிக பயணிகள் பயணிக்கின்றனர் என்பன உட்பட விபரங்களை இக்குழுவினர் சேகரிக்க உள்ளனர்.
இதன் வாயிலாக எந்த வழித்தடத்தில் எந்த 'டிரிப்' இயக்கும் போது கலெக்ஷன் குறைகிறது, டீசல் விரயம் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.அதன் பின் தொடர்ச்சியாக இயங்கும் பஸ்களில் ஒன்றோ அல்லது இரண்டோ நிறுத்தப்பட்டு அந்த பஸ்சுக்கு பயன்படுத்தப்படும் டீசலை மிச்சப்படுத்தவும், பஸ்சின் டிரைவர், நடத்துனருக்கு வேறு பஸ்சில் பணி வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, வருவாய் இழப்பு ஏற்படுவதை ஓரளவு தடுக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்டமும், திங்கள், செவ்வாய், புதன் கூட்டம் இல்லாத நிலையிலும் உள்ளது. பயணிகள் எண்ணிக்கை, பயணிக்கும் கிழமைக்கு ஏற்ப பஸ் இயக்கத்தை முடிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டம் பண்டிகை, விடுமுறை நாட்களுக்கு பொருந்தாது. பயணிகள் அதிகரித்தால் விலக்கிக் கொள்ளப்படும்.வருவாய் இழப்பு ஏற்படுத்தும் பஸ்களின் நேரத்தை பரீட்சார்த்த முறையில் மாற்றியமைக்கவும், தேவை இருப்பின் மாற்றங்கள் செய்யவும் ஆலோசித்த பின் முடிவு எடுக்கப்படும் என்றனர்.