தளிஞ்சிவயல் கிராமத்தில் பட்டா வழங்க அளவீடு பணி - மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி
- மக்கள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
- மலைவாழ் கிராமங்களில் பட்டா வழங்க பணிகள் துவங்கியுள்ளது.
உடுமலை:
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில் 13க்கும் அதிகமான மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இங்கு பாரம்பரியமாக வசிக்கும் மக்கள் வன உரிமை சட்டத்தின் கீழ் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன் வாயிலாக தங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். விவசாய பணிகளையும் மேற்கொள்ள முடியும் என அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து வன உரிமை குழுக்கள் அமைக்கப்பட்டு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது. முதற்கட்டமாக உடுமலை வனச்சரகத்துக்குட்பட்ட மலைவாழ் கிராமங்களில், பட்டா வழங்க வன உரிமைக்குழு தீர்மானங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அமராவதி வனச்சரகத்துக்குட்பட்ட மலைவாழ் கிராமங்களில் பட்டா வழங்க பணிகள் துவங்கியுள்ளது. தளிஞ்சிவயல் கிராமத்தில் வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா வழங்க வனத்துறையால் அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.