சத்துணவு திட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்தக்கூடாது - அரசு ஊழியா்கள் சங்கம் வலியுறுத்தல்
- செப்டம்பா் 22 ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டமும் நடத்தப்படவுள்ளது.
- சத்துணவு ஊழியா்கள் மூலமாகவே அமல்படுத்த வேண்டும்.
தாராபுரம்:
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் சு.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:-
சங்க முன்னாள் மாநிலத் தலைவா் சுப்பிரமணியனின் தற்காலிகப் பணிநீக்க உத்தரவை ரத்து செய்வது உள்ளிட்ட நிலுவைக்கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டமாகப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், மண்டல அளவில் வரும் ஜூலை 22 ந்தேதி தர்ணாவும், சென்னையில் வரும் ஆகஸ்ட் 16 ந்தேதி முதல் ஆகஸ்ட் 19 ந்தேதி வரையில் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டமும், செப்டம்பா் 22 ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டமும் நடத்தப்படவுள்ளது.
சத்துணவு திட்டத்தின்கீழ் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவது என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. அதே வேளையில், இந்தத் திட்டத்தின் மகளிா் சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்தாமல் சத்துணவு ஊழியா்கள் மூலமாகவே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாவட்டத்தலைவா் ஞானசேகரன், மாநில துணைத்தலைவா்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.