உடுமலையில் மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபர்கள் 2பேர் கைது
- கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
- போலீசார் சரவணன், கண்ணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உடுமலை:
உடுமலை யசோதா ராமலிங்கம் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள்( வயது 80). இவருக்கு திருமணம் ஆகாததால் தனது சகோதரருடன் வசித்து வருகிறார். ராஜம்மாள் கடந்த 12-ந்தேதி காந்திநகரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்கு சென்றார். சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் ராஜம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 2 1/2 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ராஜம்மாள் உடுமலை போலீசில் புகார் செய்தார்.
கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி. பதிவுகளை வைத்து தலைமறைவான மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் உடுமலை பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் செயின் பறிப்பு சம்பவம் நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி., பதிவுகளும் அவர்களுடன் ஒத்துப்போனது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்த நபர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த சரவணன்(31), கண்ணன்(20) என்பதும் ராஜம்மாளிடம் தங்கச் செயினை பறித்து சென்றதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் போலீசார் சரவணன், கண்ணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.