பஞ்சாலை தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம்: நிர்ணய குழுவின் கருத்து கேட்பு கூட்டம் - திருப்பூரில் 17-ந்தேதி நடக்கிறது
- தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள், நிர்வாக தரப்பு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 6-வது தளத்தில் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
திருப்பூர்:
பஞ்சாலை தொழிலுக்கு (வேலை பழகுனர்கள் தவிர) குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் வகையில் கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் செயலாளராக கோவை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்), தற்சார்பு உறுப்பினர்களாக இணை இயக்குனர் பஞ்சாலை சென்னை, இணை இயக்குனர்-1 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் திருப்பூர், புள்ளியியல் உதவி இயக்குனர், பொருளியல் மற்றும் புள்ளியல்துறை கோவை ஆகியோர் உள்ளனர். தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள், நிர்வாக தரப்பு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுவால் வருகிற 17-ந் தேதி திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் பஞ்சாலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து விவரங்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவின் கருத்து கேட்பு கூட்டம் வருகிற 17-ந் தேதி காலை 10.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 6-வது தளத்தில் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலையளிப்போர், வேலையளிப்போர் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழுவினரிடம் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி தெரிவித்துள்ளார்.