உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூரில் கலைத்திருவிழா போட்டிகள் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் -தொடங்கி வைத்தார்

Published On 2023-10-27 11:21 GMT   |   Update On 2023-10-27 11:21 GMT
  • கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், செல்வராஜ் எம்.எல்.ஏ., முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.
  • கலை திருவிழா போட்டிகளில் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு கலையரசன்,கலையரசி விருதுகள் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படவுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் மாதிரி நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2023-2024ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், செல்வராஜ் எம்.எல்.ஏ., முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.

விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாவது:-

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பின்படி 2022-2023 ம்ஆண்டு முதல் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்தொடர்ச்சியாக 2023 - 2024 ம் கல்வி ஆண்டிலும் கலைத்திருவிழா போட்டிகள் மாவட்ட அளவில் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் முன்னெடுப்பின்படி மாநிலம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் கலைத்திரு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நடனம், இசை, ஓவியம், நாட்டுப்புற கலைகள், நவீன கலை வடிவங்கள் என பலவற்றிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.பள்ளி மாணவர்களின் கலைத்திறனை ஊக்கப்படுத்துவதன் வழியாக அவர்களுக்கு கல்வியின் மீதான ஈடுபாட்டையும் வளர்த்தெடுக்க முடியும்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கலைத் திருவிழாப் போட்டிகள் 10.10.2023 முதல் 14.10.2023 வரை நடைபெற்றது. இப்போட்டிகளில் 1,25,613மாணவர்கள் பங்கேற்று 32,860 மாணவர்கள் வெற்றி பெற்றனர். தொடர்ந்து வட்டார அளவிலான போட்டிகள் 18.10.2023 முதல் 21.10.2023 வரை நடைபெற்றது. இப்போட்டிகளில் 22,994 மாணவர்கள் பங்கேற்று 8,877 மாணவர்கள் வெற்றிபெற்றனர். மேலும், கலைத்திருவிழாப்போட்டிகள் மாவட்ட அளவில் ஜெய்வாபாய்மாதிரி நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி 28.10.2023 வரை நடைபெறவுள்ளது. இக்கலைத்திருவிழாவில் பல்வேறு போட்டிகளில் 6,801 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.அதனைத்தொடர்ந்து, மாநில அளவிலான போட்டிகள் 21.11.2023 முதல்24.11.2023 வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் கட்டுரை, பேச்சு, ஓவியம்,நடனம், இசைக்கருவிகள் இசைத்தல் முதலிய வகைகளில் கீழ்க்கண்ட 3பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு 33வகையான போட்டிகள், 9 முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு 75 வகையான போட்டிகள் மற்றும் 11 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 82 வகையானபோட்டிகள் நடைபெறுகிறது.கலை திருவிழா போட்டிகளில் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு கலையரசன்,கலையரசி விருதுகள் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படவுள்ளது. மேலும் கலைத் திருவிழாப் போட்டிகளில் சிறப்பாக செயல்படக்கூடிய 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவார்கள். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பரமணியன், திருப்பூர் மாநகராட்சி4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, கவுன்சிலர் திவாகரன், மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.   

Tags:    

Similar News